அமெரிக்க ஆய்வாளர்கள் அனைத்து வகையான கொரோனா தொற்றுகளிலிருந்தும் பாதுகாக்கும் வகையில் சூப்பர் வேக்சின் ஒன்றை கண்டுபிடித்துள்ளனர்.
உலக நாடுகளுக்கிடையே கொரோனா தொற்று உருமாறி பரவி வரும் சூழ்நிலையில் அமெரிக்க விஞ்ஞானிகள் அனைத்து வகையான கொரோனா வைரஸ்களிலிருந்தும் பாதுகாத்தும் விதமாக புதிய சூப்பர் வேக்சின் தடுப்பூசியை கண்டுபிடித்து அசத்தியுள்ளனர். சூப்பர் வேக்சின் என்று குறிப்பிடப்படும் ஹைபிரிட் தடுப்பு மருந்தை அமெரிக்காவின் வடக்கு கரோலினாவில் உள்ள மருத்துவ பல்கலைக்கழகத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். மேலும் இந்த தடுப்பு மருந்து கொரோனா வைரஸில் ஆபத்தான ஒன்றான ஸ்பைக் புரதத்திற்கு எதிராக செயல்படுகிறதா என்பதை உறுதி செய்ய எலிகள் மீது பரிசோதனை நடத்தப்பட்டது.
அதில் நுரையீரல் பாதிப்பு மற்றும் நோய்தொற்று ஏற்படாமல் தடுக்க இந்த சூப்பர் வேக்சின் மிக பெரிய உதவியாக இருக்கும் என்று ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ்கள் மட்டுமில்லாமல் மனிதர்களுக்கு விலங்குகள் மூலம் பரவும் நோய்களுக்கு எதிராகவும் இந்த தடுப்பு மருந்து செயல்படும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் அடுத்த ஆண்டு மனிதர்களுக்கு இந்த தடுப்பு மருந்து செலுத்தப்பட்டு பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.