கை,கால்களை கட்டி போட்டு பெண் உயிருடன் எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாவட்டத்திலுள்ள நொளம்பூர் காவல்துறையினருக்கு பைபாஸ் சர்வீஸ் சாலையில் இருக்கும் காலி இடத்தில் கை,கால்கள் கட்டப்பட்ட நிலையில் பெண்ணின் சடலம் எரிந்து கொண்டிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் எரிந்த நிலையில் இருந்த பெண்ணின் பிணத்தை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இந்நிலையில் காவல்துறையினர் அந்த இடத்தில் கிடந்த ஒரு பையை சோதனை செய்த போது, எரிந்த நிலையில் மீட்கப்பட்ட பெண் சக்தி சாய்ராம் நகரில் வசிக்கும் முருகனின் மனைவி ரேவதி என்பது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது.
மேலும் அவர் சென்னை மாநகராட்சி வளசரவாக்கம் மண்டல அலுவலகத்தில் தூய்மை பணியாளராக வேலை பார்த்ததும் காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் ரேவதியுடன் வேலை பார்க்கும் குப்பை அள்ளும் பேட்டரி ஆட்டோ டிரைவராக பணிபுரியும் தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த திம்மப்பா என்பவருடன் ரேவதிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. அதன் பின் நாளடைவில் அது கள்ளக்காதலாக மாறி விட்டது.
இந்நிலையில் ரேவதி அடமானம் வைப்பதற்காக தனது 5 பவுன் தங்க சங்கிலியை திம்மப்பாவிடம் கொடுத்துள்ளார். இதனையடுத்து நொளம்பூர் சர்வீஸ் சாலையில் இருக்கும் காலி இடத்தில் வைத்து திம்மப்பாவும், ரேவதியும் தனிமையில் பேசிக் கொண்டிருந்த சமயத்தில் அடமானம் வைப்பதற்காக கொடுத்து 5 பவுன் தங்க சங்கிலியை மீட்டு தரும்படி ரேவதி அவரிடம் கேட்டுள்ளார். இதனையடுத்து இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்ட போது இங்கு சத்தம் போட வேண்டாம் மறைவாக போய் பேசலாம் என்று கூறி திம்மப்பா ரேவதியை முட்புதருக்குள் அழைத்து சென்றுள்ளார்.
அதன்பின் ரேவதி எதிர்பார்க்காத சமயத்தில் திம்மப்பா துணியை அவரின் வாயில் வைத்து அமுக்கி, ரேவதியின் துப்பட்டாவால் அவரது கை, கால்களை கட்டியுள்ளார். இதனையடுத்து திம்மப்பா தான் வைத்திருந்த கத்தியால் ரேவதியின் கழுத்தை அறுத்ததால் அவர் மயங்கி விட்டார். அதன் பின் திம்மப்பா ரேவதி உயிரோடு இருக்கும் போதே அவரை எரித்து கொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடியது காவல்துறையினர் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் திம்மப்பாவை கைது செய்த காவல்துறையினர் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.