ஐ.நா.வின் யுனெஸ்கோ அமைப்பு ஆஸ்திரேலிய பவளப்பாறைகள் அழியும் நிலையில் உள்ளதாக வெளியிட்ட அறிக்கை சர்ச்சையை கிளப்பியுள்ளது.
உலகின் மிகப்பெரிய பவளப்பாறை திட்டான “தி கிரேட் பேரியர் ரீஃப்” ஆஸ்திரேலியாவின் வடகிழக்கு கடலோரப் பகுதியில் கடலுக்கு அடியில் அமைந்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் பல லட்சம் சுற்றுலா பயணிகள் இந்த புகழ்பெற்ற அழகிய பவளப்பாறை திட்டை காண ஆஸ்திரேலியாவிற்கு உலகமெங்கிலுமிருந்து படையெடுத்து வருகின்றனர். அதன்மூலம் சுமார் 480 கோடி ரூபாய் ஆஸ்திரேலிய அரசுக்கு வருமானமாக கிடைக்கிறது.
ஆனால் இந்த பவளப்பாறை திட்டுக்கு கடல்களில் ஏற்படும் வெப்ப அலைகளினால் ஆபத்து ஏற்பட்டுள்ளதால், ஐ.நா.வின் யுனெஸ்கோ அமைப்பு குழு இந்த பவளப்பாறை திட்டை அழியும் நிலையில் உள்ள புராதான சின்னங்கள் பட்டியலில் சேர்க்க பரிந்துரை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் ஆஸ்திரேலியாவின் சுற்றுச்சூழல் அமைச்சர் சூசன் லே இந்த பரிந்துரையை கடுமையாக விமர்சித்துள்ளார்.
மேலும் இவ்வாறு இந்த பவளப்பாறை திட்டை அழியும் நிலையில் உள்ள புராதான சின்னங்கள் பட்டியலில் சேர்த்தால் அதனை பார்க்க வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையானது குறைந்து ஆஸ்திரேலியா நாட்டிற்கு வருவாய் பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் வருவாயை மட்டும் எண்ணாமல் இயற்கையை காக்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கடல் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.