குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைந்து அட்டகாசம் செய்த குரங்குகளை வனத்துறையினர் கூண்டு வைத்து பிடித்தனர்.
மனிதர்கள் அவரவர் வாழ்வாதார தேவைகளுக்காக காடுகளை அழித்து வருகின்றனர். இதனால் வன விலங்குகள் உணவிற்காக மனிதர்கள் வாழும் இடத்திற்கு வரும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள கொடைக்கானல் பகுதியில் ஊரடங்கு காரணமாக மக்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடக்கின்றனர். இதனால் சாலையில் பொதுமக்களின் நடமாட்டம் குறைந்துள்ளது.
இந்நிலையில் குரங்குகள் குறிஞ்சி ஆண்டவர் பகுதியில் இருக்கும் குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்ததால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். இதனையடுத்து குரங்குகள் வீட்டிற்குள் நுழைந்து அங்கிருக்கும் பொருட்களை சேதப்படுத்தியதோடு மட்டுமல்லாமல் உணவுப் பொருள்களையும் தின்று நாசமாக்கியது. இதனால் அப்பகுதியில் குரங்குகளின் அட்டகாசம் அதிகரித்து வந்துள்ளது.
எனவே அப்பகுதி மக்கள் வனத்துறை அதிகாரிகளிடம் குரங்குகளை பிடித்து வனப்பகுதியில் விடுமாறு கேட்டுக் கொண்டுள்ளனர். இதனால் அப்பகுதிக்கு வந்த கொடைக்கானல் வனத்துறையினர் அட்டகாசம் செய்யும் குரங்குகளை பிடிப்பதற்காக 2 இடங்களில் கூண்டுகளை தயார் நிலையில் எடுத்து வைத்தனர்.
மேலும் குரங்குகளை சிக்க வைப்பதற்காக கூண்டிற்குள் வாழைப்பழங்களை வைத்தனர். அந்த வாழைப்பழங்களை சாப்பிடுவதற்காக வந்த குரங்குகள் கூண்டிற்குள் மாட்டிக் கொண்டது. இதனையடுத்து வனத்துறை அதிகாரிகள் அந்த குரங்குகளை அடர்ந்த காட்டிற்குள் கொண்டு போய் விட்டனர்.