பிரசவத்தின் போது பெண் யானையும், வயிற்றிலிருந்த குட்டியும் பலியான சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.
கிரிஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள தேன்கனிக்கோட்டை வனப்பகுதியில் ஏராளமான யானைகள் வாழ்ந்து வருகின்றன. இந்நிலையில் வனத்துறையினர் ஓசூர் வனக்கோட்டம் பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த போது 24 வயதுடைய பெண் யானை இறந்து கிடப்பதை பார்த்துள்ளனர். இதுகுறித்து வனத் துறையினர் உடனடியாக உயரதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனச்சரகர் வெங்கடாசலம் மற்றும் கால்நடை டாக்டர் பிரகாஷ் போன்றோர் அந்த யானையின் உடலை பிரேத பரிசோதனை செய்துள்ளனர். அப்போது அந்த யானையின் வயிற்றுக்குள் ஆண் யானை குட்டி ஒன்று இறந்த நிலையில் இருந்துள்ளது. இது குறித்து வனத்துறையினர் கூறும் போது, குட்டியை ஈனும் போது எதிர்பாராதவிதமாக குட்டி வெளியே வர முடியாததால் சிரமப்பட்டு தாயும், குட்டியும் இறந்திருக்கலாம் என தெரிவித்துள்ளனர்.