Categories
தேனி மாவட்ட செய்திகள்

மருமகனின் இறுதி சடங்கு… வீடு திரும்பிய பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி… திருடர்களின் கைவரிசை…!!

தேனி மாவட்டத்தில் பூட்டியிருந்த வீட்டில் இருந்து 45 பவுன் தங்க நகைகளை திருடிய மர்ம நபர்கள் குறித்து போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

தேனி மாவட்டம் போடியில் அன்னகாமு(49) என்பவர் வசித்து வந்துள்ளார். அவரது கணவர் இளங்கோ கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்த நிலையில் அன்னகாமு தனியாக வசித்து வந்துள்ளார். இதனையடுத்து இவர்களின் மகள் கார்த்திகை பிரியாவுக்கும், மகன் கௌதம் பிரபுவுக்கும் திருமணம் முடிந்துள்ள நிலையில், பிரியா தேவதானப்பட்டியிலும், கௌதம் மதுரையிலும் வசித்து வருகின்றனர். இதனைத்தொடர்ந்து பிரியாவின் கணவர் சில தினங்களுக்கு முன் இறந்துள்ளார். இதனால் அவருடைய ஈம சடங்கு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக அன்னகாமு தேவதானப்பட்டிக்கு சென்றுள்ளார்.

இந்நிலையில் கடந்த 21ஆம் தேதி அன்னகாமு வசிக்கும் வீடு திறந்திருப்பதை பார்த்த வீட்டு உரிமையாளர் உடனடியாக அவருக்கு தகவல் தெரிவித்துள்ளார். மேலும் போடிக்கு வந்த அன்னகாமு வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு பொருட்கள் அனைத்தும் சிதறி கிடந்துள்ளது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் வீட்டில் வைத்திருந்த நகைகள் இருக்கிறதா என பார்த்தபோது வீட்டில் இருந்த 45 பவுன் நகைகள் திருடு போயிருந்தது. இதனையடுத்து அவர் உடனடியாக போடி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

அந்த புகாரின் அடிப்படையில் இன்ஸ்பெக்டர் சரவணன், சப் இன்ஸ்பெக்டர் அருண் பாண்டியன் தலைமையில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை நடத்தியுள்ளனர். மேலும் கைரேகை நிபுணர்களை வரவழைத்து வீட்டில் பதிவான தடயங்களையும் சேகரித்தனர். இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து திருடிய மர்ம நபர்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |