அதிகரித்து வரும் பிளாஸ்டிக் பொருட்களின் கழிவுகளை குறைப்பதற்கு விஞ்ஞானிகள் புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளனர் .
ஐ.நா. சபை வெளியிட்ட சுற்றுச்சூழல் திட்டக்குழு செய்திக்குறிப்பு ஒன்றில், உலக நாடுகள் முழுவதும் ஒரு நிமிடத்திற்குள் விற்பனை செய்யப்படும் பத்து லட்சம் பிளாஸ்டிக் பொருட்களில் 14 சதவீதம் மட்டுமே மறுசுழற்சி செய்யப்படுவதாகவும் மற்றவை பிளாஸ்டிக் கழிவுகளாக கொட்டப்படுவதாகவும் தெரிவித்துள்ளது. இதனால் தற்போது வரை பிளாஸ்டிக் கழிவுகளை மக்கிப் போக செய்யும் தொழில்நுட்பத்தை கண்டறிய உலக நாடுகளில் உள்ள விஞ்ஞானிகள் பலரும் பல்வேறு ஆராய்ச்சிகளை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் ஸ்காட்லாந்து நாட்டில் எடின்பர்க் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் பிளாஸ்டிக் பாட்டில் கழிவுகளில் மரபணு மாற்றம் செய்யப்பட்ட பாக்டீரியாவை பயன்படுத்தி வெனிலா சாறு தயாரிக்கும் தொழில்நுட்பத்தை கண்டுபிடித்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் வெளியிட்ட ஆய்வில் இ – கோலி எனப்படும் பாக்டீரியா பிளாஸ்டிக் பாட்டிலில் இருக்கும் முக்கிய வேதிப்பொருளான தெரப்தாலிக் அமில மூலக்கூறில் சிறிய மாற்றத்தை ஏற்படுத்தி அதனை வெனிலின் எனப்படும் வேதி பொருளாக மாற்றும் திறன் உடையது .
இந்த வகையான வெனிலின் வேதிப் பொருள் வெனிலா எஸ்ட்ராக்ட் எனப்படும் வெனிலா சாறு தயாரிப்பதற்க்கு பயன்படுத்தப்படும் முக்கிய வேதிப் பொருள் ஆகும். இந்த வெனிலா சாறு வெனிலா பீன்ஸ் என்ற ஒரு வகையான தாவரத்தில் இருந்து தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்த வெனிலா சாறு கேக், ஐஸ்க்ரீம் போன்ற சாப்பிடும் உணவு பொருளிலும் ,அழகு சாதனங்கள், மருந்துகள் மற்றும் வாசனை திரவியங்கள் ஆகிய பொருட்களிலும் பயன்படுத்தப்படுகிறது. தற்போது கண்டுபிடிக்கப்பட்டஇந்த புதிய தொழில்நுட்பத்தின் மூலம் அதிகப்படியாக பிளாஸ்டிக் கழிவுகளை குறைக்கலாம் என விஞ்ஞானிகள் கூறியுள்ளனர் .