தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதனால் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதன் காரணமாக மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகளும் கல்லூரி மாணவர்களுக்கு தேர்வுகளும் நடந்து கொண்டிருக்கின்றன. தற்போது அடுத்த கல்வியாண்டு தொடங்கி விட்டதால் பள்ளி மற்றும் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடந்து கொண்டிருக்கிறது.
இந்நிலையில் தமிழகத்தில் உயர் நீதிமன்ற உத்தரவின்படி தனியார் கல்லூரிகளில் 70 சதவீதம் கட்டணம் மட்டுமே வசூல் செய்ய வேண்டும் என்று அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். உயர் நீதிமன்ற உத்தரவை மீறி கூடுதல் கட்டணம் வசூலிக்கும் கல்லூரிகள் மீது புகார் வரப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் எச்சரித்துள்ளார். மேலும் கொரோனா காலத்தில் மாணவர்கள் விண்ணப்பிக்க ஏதுவாக இணையவழி தொடங்கப்பட்டுள்ளது என்று அவர் கூறியுள்ளார்.