நாட்டுப் படகில் மீன்பிடிக்க சென்ற 5 மீனவர்கள் நடுக்கடலில் மாட்டிக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள நம்புதாளை பகுதியில் ஏராளமான மீனவர்கள் தங்கள் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். இந்நிலையில் அப்பகுதியில் வசிக்கும் பாண்டி, ராஜதுரை, கருணானந்தம், தூண்டிமுத்து மற்றும் நாகூர் கனி ஆகிய 5 பேரும் இணைந்து நாட்டு படகை எடுத்துக்கொண்டு கடலுக்குள் மீன் பிடிப்பதற்காக சென்றுள்ளனர். இதனையடுத்து அவர்கள் 5 பேரும் கடலில் மீன்களை பிடித்துக் கொண்டு கரைக்கு செல்லும் போது படகில் உள்ள எஞ்சினில் கோளாறு ஏற்பட்டதால் திடீரென படகு நடுக்கடலில் நின்று விட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த மீனவர்கள் என்சினில் ஏற்பட்ட கோளாறை சரி செய்ய நீண்ட நேரம் போராடியும் எஞ்சினை சரி செய்ய முடியாததால் அவர்கள் 5 பேரும் நடுக்கடலில் படகிலே மாட்டிக்கொண்டனர் .
இதனையடுத்து மீனவர்கள் தங்களின் தொலைபேசி மூலம் காவல் குழும கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்டு தகவலை தெரிவித்துள்ளனர். அந்த தகவலை அறிந்த கடலோர காவல் குழும இன்ஸ்பெக்டர் முத்துக்கண்ணு, சப்-இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் மற்றும் பாதுகாப்பு படையினர் ஆகியோருடன் இணைந்து ரோந்து படகின் மூலம் அப்பகுதிக்கு சென்றுள்ளனர். அப்போது நடுக்கடலில் மாட்டிக் கொண்டிருந்த 5 மீனவர்களையும், படகயும் பத்திரமாக மீட்டு கரைக்கு கொண்டு சென்றுள்ளனர். அதன் பிறகு படகில் ஏற்பட்ட எஞ்சின் கோளாறை சரி செய்ததோடு அவர்களுக்கு தேவையான உதவிகளை காவல்துறையினர் செய்து கொடுத்து விட்டு அங்கிருந்து சென்றனர்.