ராமநாதபுரத்தில் 9,000 மீட்டர் மின் கம்பியை திருடிய 2 பேரை கைது செய்த போலீசார் மேலும் 2 பேரை தேடி வருகின்றனர்.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை அடுத்துள்ள செங்கப்படை கிராமத்தில் தனியார் சோலார் மின் உற்பத்தி நிலையம் உள்ளது. இந்த மின் நிலையத்தில் இருந்து பல கிராமங்களுக்கு மின் விநியோகம் செய்யப்படுவதற்காக மின் கம்பிகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கோவிலாங்குளம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் அமைத்திருந்த 9,000 மீட்டர் அளவுள்ள மின்கம்பி திருடுபோய் உள்ளது. இச்சம்பவம் குறித்து கோவிலாங்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து திருடியவர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
அந்த விசாரணையில் தொட்டியாபட்டி பகுதியை சேர்ந்த செந்தூர்முருகன்(22), வேல்முருகன்(25) 4 பேர் இந்த திருட்டில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. இதனைத்தொடர்ந்து வேல்முருகன், செந்தூர் முருகன் ஆகிய இருவரை நேற்று போலீசார் கைது செய்துள்ளனர்.மேலும் அவர்களிடமிருந்த இருசக்கர வாகனம், டிராக்டர், 2,52,000 ரூபாயையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். இதனையடுத்து தலைமறைவான 2 பேரையும் போலீசார் தேடி வருகின்றனர்.