இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி விளையாட உள்ளது.
ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்தியா- நியூசிலாந்து அணிகள் மோதிக்கொண்டன. இதில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி நியூசிலாந்து அபார வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. இதையடுத்து இந்திய அணி இங்கிலாந்துக்கு எதிராக 5 டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறது . இந்தப் போட்டி ஆகஸ்ட் மாதம் 4 ம் தேதி தொடங்க உள்ளது. மேலும் இந்த 5 டெஸ்ட் போட்டிகள் நீண்ட தொடராக இருப்பதால் இதற்கு தயாராகும் வகையில் இரண்டு பயிற்சி ஆட்டத்தில் விளையாட வேண்டும் என்று பிசிசிஐ விரும்புகிறது.
இதுகுறித்து பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா இங்கிலாந்து கிரிக்கெட் போர்டு தலைமை அதிகாரி டாம் ஹாரிசனிடம் 2 பயிற்சி ஆட்டத்திற்கு ஏற்பாடு செய்வது குறித்து பேச இருக்கிறார் .தற்போது நடந்து முடிந்த ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்திய அணி பயிற்சி ஆட்டம் ஏதுமில்லாததால் இந்திய அணியால் போட்டிக்கு நன்கு தயாராக முடியவில்லை என்று சொல்லப்படுகிறது . இதனால் பிசிசிஐ இந்த முடிவை எடுத்துள்ளது. அதோடு பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா இந்திய அணி நிர்வாகத்திடம் பேசியபோது ,வீரர்கள் அனைவரும் பயிற்சி ஆட்டம் தேவை என்று வலியுறுத்தியதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.