ராமநாதபுரத்தில் முன்பகையால் கொத்தனாரை வெட்டிய 2 பேரை கைது செய்த போலீசார் மேலும் ஒருவரை தேடி வருகின்றனர்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் தெருவில் வசித்து வரும் நாகேந்திரன்(39) என்பவர் கொத்தனார் வேலை செய்து வருகின்றார். இந்நிலையில் சில தினங்களுக்கு அதே பகுதியில் வசிக்கும் குமார்(27) என்பவர் மது அருந்திவிட்டு தெருவில் நின்று தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது நாகேந்திரன் இதுபோல் தகராறு செய்ய கூடாது என குமாரை கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த குமார் நேற்று முன்தினம் அவரது நண்பர்களுடன் இணைந்து நாகேந்திரனை அரிவாளால் தாக்கியுள்ளனர்.
இந்த சண்டையில் நாகேந்திரனின் தலை மற்றும் உடலில் பலத்தகாயம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அங்கிருந்தவர்கள் அவரை ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து நாகேந்திரன் காவல்துறையினரிடம் குமார் மற்றும் அவரது நண்பர்கள் மீது புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து குமார் மற்றும் அவருடைய நண்பர் விக்ரனை(28) கைது செய்துள்ளனர். மேலும் தலைமறைவான ரவி என்பவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.