வங்கதேசத்தில் இஸ்லாமிய மதகுரு முகநூலில் ஹாஹா எமோஜியை குறிப்பிடுபவர்களுக்கு எதிராக ஃபத்வா வழங்கவும் என்று கூறிய வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
முகநூல் பக்கம் தொடங்கப்பட்ட காலத்தில் லைக் மற்றும் கமெண்ட் என்ற இரண்டு மட்டுமே இருந்தது. ஆனால், தற்போது கோபம், சோகம், சிரிப்பு, போன்றவற்றை வெளிப்படுத்தும் எமோஜிகள் இருக்கிறது. இதில் சிரிப்பதை குறிக்கும் எமோஜி பல சமயங்களில் பிரச்சனையை ஏற்படுத்திவிடுகிறது.
இந்நிலையில் வங்கதேசத்தில் உள்ள இஸ்லாமிய மதகுருவான அஹ்மதுல்லா, முகநூல் பக்கத்தை அதிகம் உபயோகிக்கிறார். மேலும் யூடியூபிலும் அதிக வீடியோக்களை பதிவேற்றுவதால், 3 மில்லியன் பேர் இவரை பின்தொடர்கிறார்கள்.
இந்நிலையில் இவர் கடந்த 19ஆம் தேதியன்று தன் முகநூல் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டிருந்தார். அதில் முகநூல் பக்கத்தில் உள்ள “ஹா ஹா” என்று பிறரை கேலி செய்து சிரிப்பது போல் உள்ள எமோஜியை உபயோகிப்பது தொடர்பில் பல தகவல்களை கூறியிருந்தார். அதில் ஒருவரை சிரித்து, கேலி செய்வதற்காக “ஹா ஹா” எமோஜியை முகநூல் பக்கத்தில் பயன்படுத்தினால், அவர்களுக்கு எதிராக ஃபத்வா அளிக்கவும் என்று கூறியிருந்தார்.
இஸ்லாம் மதத்தை பொருத்தவரை, மற்றவர்களை கிண்டல் செய்து சிரிப்பது பாவம். இஸ்லாமின் புனித புத்தகத்தில், ஒருவரை கேலி, கிண்டல் செய்து நகைச்சுவை செய்வது தவறு என்று குறிப்பிடப்பட்டுள்ளது என்று கூறியிருக்கிறார். தற்போது இந்த எமோஜியை பயன்படுத்துவது முகநூல் பக்கத்தில் சாதாரணமாக மாறிவிட்டது.
ஆனால் அது பிரச்சனைகளை உண்டாக்கினால் அந்த நபர் பாவம் செய்வதாக குறிப்பிடப்படும். எந்த ஒரு நிலையிலும் பிறரைப் பார்த்து “ஹா ஹா” என்று முகநூலில் குறிப்பிடாதீர்கள். அதனை முழுமையாக தவிர்த்து விடுங்கள் என்று கூறியிருக்கிறார். இவ்வாறு “ஹா ஹா” எமோஜிக்கு விளக்கமளித்து, முகநூல் பக்கத்தில் இவர் வெளியிட்டிருந்த வீடியோவை பார்த்த பலர் இவருக்கே “ஹா ஹா” எமோஜியை குறிப்பிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.