நியூசிலாந்துக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியின் போது இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் ஷர்மாவுக்கு காயம் ஏற்பட்டதால் தையல் போடப்பட்டுள்ளது .
ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்தியா- நியூசிலாந்து அணிகள் மோதிக்கொண்டன. இதில் நியூசிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் முதல் இன்னிங்சில் சிறப்பாக பந்து வீசிய இந்திய அணி வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் ஷர்மா 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இந்நிலையில் நியூசிலாந்து வீரர் ராஸ் டெய்லர் அடித்த பந்தை தடுக்க முயற்சித்த போது அவரது வலது கை விரலில் காயம் ஏற்பட்டதால் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு மருத்துவர்கள் பரிசோதித்ததில் அவருக்கு காயம் கடுமையாக இருந்ததால் கை விரலில் தையல் போட்டுள்ளனர்.
இதனால் இஷாந்த் சர்மா சிறிது நாட்கள் ஓய்வெடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து இந்திய அணி இங்கிலாந்துக்கு எதிராக 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. இந்த இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இஷாந்த் ஷர்மா பங்கேற்பது சந்தேகம்தான் என்று பலர் கருதினர். இந்நிலையில் பிசிசிஐ அதிகாரி ஒருவர் இஷாந்த் ஷர்மாவின் காயம் குறித்து கூறிய போது, “அவருக்கு ஏற்பட்டுள்ள காயம் 10 நாட்களில் சரியாகி விடும் என்பதால் அவர் இதில் இருந்து முழுமையாக குணமடைந்து விடுவார். இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டி தொடங்க 20 நாட்கள் இருப்பதால் அதற்குள் அவர் தயாராகி விடுவார் “,என்று அவர் கூறியுள்ளார்