ஐரோப்பிய நாடான ஐஸ்லாந்தில் மொத்தமாக கொரோனா விதிமுறைகள் நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது கொரோனா வைரஸ் வெவ்வேறு வகையாக உருமாற்றம் அடைந்து பரவி வந்தாலும் தடுப்பூசிகளினால் அவற்றை கட்டுப்படுத்த முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தற்போது தயாரிக்கப்பட்டுள்ள, தடுப்பூசிகள் உருமாற்றம் அடைந்த கொரோனோவை எதிர்த்து நல்ல பலனளிப்பதாக தெரியவந்துள்ளது.
எனவே அனைவரும் தடுப்பூசி செலுத்த அறிவுறுத்தப்படுகிறது. இந்நிலையில் ஐரோப்பிய நாடான ஐஸ்லாந்து, கொரோனா விதிமுறைகள் அனைத்தையும் அகற்றியுள்ளது. முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளி பின்பற்றுவது போன்ற அனைத்து விதிமுறைகளும் நீக்கப்பட்டிருக்கிறது.
நேற்று நள்ளிரவிலிருந்து இது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. மக்கள் படிப்படியாக இயல்பு வாழ்க்கைக்கு திரும்புவதற்கான முயற்சி இது என்று அந்நாட்டின் சுகாதார அமைச்சர் Svandís Svavarsdóttir தெரிவித்துள்ளார். எனினும் ஐஸ்லாந்து அரசு, மக்கள் கூடும் இடங்களில் கிருமி நாசினி அடிக்கடி தெளிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.
மேலும் தலைமை தொற்று நோயில் நிபுணராகவுள்ள, órólfur Guðnason என்பவர் கூறுகையில், தடுப்பூசிகள் கொரோனாவை, எதிர்த்து போராடுவதில் நல்ல பலனளிக்கிறது. எனவே கடந்த 15 மாதங்களாக பின்பற்றப்பட்டு வந்த கடும் விதிகள் இனிமேல் தேவையில்லை என்று கூறியிருக்கிறார். மேலும் நாட்டில் கடந்த 15ஆம் தேதிக்கு பின்பு கொரோனா தொற்றுகள் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.