இந்து முன்னணியினர் திடீரென நூதன போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் கொரோனா தொற்றின் 2 – வது அலை பரவி வரும் காரணத்தினால் தளர்வுகளுடன் கூடிய முழு ஊரடங்கை அரசு அமல்படுத்தியுள்ளது. இதனை அடுத்து வழிபாட்டு தலங்களுக்கு செல்ல பக்தர்களுக்கு அரசு அனுமதி அளிக்கவில்லை. ஆனால் பூஜைகள் அனைத்தும் வழக்கமாக நடக்கலாம் என்று அரசு அனுமதி கொடுத்துள்ளது. இந்நிலையில் தமிழகம் முழுவதும் கோவில்களை திறந்து பக்தர்கள் தரிசனம் செய்வதற்கு அரசு அனுமதி கொடுக்க வேண்டுமென விருதுநகர் மாவட்டத்தில் இந்து முன்னணி அமைப்பினர் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதனை தொடர்ந்து சிவகாசியில் இருக்கும் சிவன் கோவில் முன்பு இந்து முன்னணி அமைப்பின் தலைவரான பரமேஸ்வரன் தலைமையில் போராட்டமானது நடைபெற்றுள்ளது. இந்த போராட்டத்தில் சுரேஷ் என்பவர் தலைகீழாய் நின்று நூதனமான முறையில் தனது கோரிக்கையை அரசிற்கு முன் வைத்துள்ளார். மேலும் இந்த போராட்டத்தில் பலரும் கலந்து கொண்டு கோவில் நடை திறந்து பக்தர்களுக்கு அனுமதி கொடுக்க வேண்டும் என அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.