வன்னியர்களுக்கு 20 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கக்கோரி பாமக மற்றும் வன்னியர் சங்கத்தினர் கடந்த ஆண்டு டிசம்பர் 1ஆம் தேதி மனித சங்கிலி ஆர்ப்பாட்டம், மறியல் போராட்டங்களில் ஈடுபட்டனர். அப்போது ரயில் மீது கல்வீச்சு தாக்குதல், ரயில் மறியல் மற்றும் சாலை மறியலில் ஈடுபட்டனர். மேலும் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் பொதுச் சொத்துக்களை சேதம் செய்ததால் பாமக மற்றும் வன்னியர் சங்கத்தை சேர்ந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி இந்திய மக்கள் மன்றத்தின் தலைவர் வராகி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கில் டிஜிபி சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில் கொரோனா கட்டுப்பாடுகளை மீறி, விதிகளை மீறி ஒன்றுகூடி, ஆர்ப்பாட்டம் மற்றும் சாலை மறியலில் ஈடுபட்ட பாமக மற்றும் வன்னியர் சங்கம் ஆகியவற்றை சேர்ந்த 35 ஆயிரத்து 554 பேர் மீது 204 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்று டிஜிபி தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.