என்னை மிஞ்சிய விஞ்ஞானி செந்தில்பாலாஜி என்று அமைச்சர் செல்லூர் ராஜு விமர்சனம் செய்ததற்கு அமைச்சர் செந்தில்பாலாஜி தக்க பதிலடி கொடுத்துள்ளார்.
மதுரை கோரிப்பாளையத்தில் அதிமுக மாணவரணி உறுப்பினர்களுடன் ஆலோசனை நடத்திய செல்லூர் ராஜு அதன்பின் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார். அதிமுக ஆட்சியில் கடந்த 10 ஆண்டுகளாக வெளிநாட்டிற்கு சென்றிருந்த அணில்கள் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு படையெடுத்து வந்து மின்கம்பி மீது ஓடி வருவதை கண்டுபிடித்த அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நோபல் பரிசு வழங்க வேண்டும் என்று விமர்சனம் செய்தார்.
மேலும் தங்களது ஆட்சியில் மின்வெட்டு என்பது இருந்ததே இல்லை. திமுக ஆட்சிக்கு வந்ததோ அப்பொழுது இருந்த மின்வெட்டு அதிகரித்து உள்ளதாக அவர் தெரிவித்தார். தன்னை தெர்மாகோல் விட்டதற்கு திமுகவினர் நவீன விஞ்ஞானி என்று விமர்சித்ததை குறிப்பிட்ட அவர் தற்போது மின்வெட்டுக்கு அணில்கள் தான் என்று கூறிய அமைச்சர் செந்தில்பாலாஜி தன்னை மிஞ்சிய விஞ்ஞானி என்று விமர்சனம் செய்தார்.
இதற்கு பதிலளிக்கும் விதமாக அமைச்சர் செந்தில் பாலாஜி தக்க பதில் ஒன்றை அளித்துள்ளார். அதில் ஆலங்குளம் துணை மின் நிலையத்து மின் பிரச்சனைகளுக்கு அணில்கள் காரணமென 2020ல் மதுரை உயர்நீதிமன்றத்தில் அப்போதைய அதிமுக அரசு விளக்கமளித்துள்ளது. பார்க்க படித்தவர் போல் இருக்கும் செல்லூர் ராஜு, இதைப்பற்றி, தங்கமணியிடமோ, உயர் நீதிமன்றத்திடமோ கேட்டு புத்தி தெளிய வேண்டுகிறேன் என்று செல்லூர் ராஜுக்கு செந்தில் பாலாஜி தக்க பதிலடி கொடுத்துள்ளார்.