நாமக்கல் மாவட்டத்தில் கோவில்களை திறக்க வலியுறுத்தி 18 கோவில்கள் முன்பு கற்பூரத்தை ஏற்றி இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்.
தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்து வரும் நிலையில் தமிழக அரசு பல தளர்வுகளை அறிவித்துள்ளது. இந்நிலையில் கோவில்களையும் திறக்க வலியுறுத்தி இந்து முன்னணி சார்பில் தமிழகம் முழுவதும் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதனையடுத்து நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கோவில்கள் முன்பு கற்பூரத்தை ஏற்றி இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதன்படி நாமக்கல் நரசிம்மர் கோவில் முன்பு நடந்த போராட்டத்திற்கு மாவட்ட செயலாளர் சரவணன் தலைமை தாங்கியுள்ளார்.
மேலும் பலபட்டரை மாரியம்மன் கோவில் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராஜ்கமல், நகர துணைத் தலைவர் ஜெகன், பொருளாளர் கார்த்திக்ராஜா ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர். இதேபோல் ராசிபுரம் நித்திய சுமங்கலி மாரியம்மன் கோவில், திருச்செங்கோடு ஓங்காளியம்மன் கோவில், கைலாசநாதர் கோவில், பள்ளிபாளையம், பரமத்திவேலூர், குமாரபாளையம் பகுதியில் உள்ள கோவில்கள் என மொத்தம் 18 கோவில்களில் இந்து முன்னணியினர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்துள்ளது. இந்நிலையில் டாஸ்மார்க் கடைகளை திறக்க அனுமதியளிக்கும்போது கோவில்களையும் திறக்க வேண்டும் என பல்வேறு கோஷங்கள் எழுப்பப்பட்டுள்ளது.