பைஸர் தடுப்பூசிக்கு பதிலாக இந்தியாவின் கோவாக்சின் தடுப்பூசியை தேர்வு செய்த விவகாரத்தில் பிரேசில் ஜனாதிபதி மீது குற்றசாட்டு வைக்கப்பட்டுள்ளது .
பிரேசில் நாட்டில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த மக்களுக்கு தடுப்பூசிகள் போடப்பட்டு வருகிறது . இந்த தடுப்பூசி விவகாரத்தில் பிரேசில் ஜனாதிபதி ஜேர் பொல்சோனாரோ ஊழல் செய்திருப்பதாக அரசாங்கத்திற்கு புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து பிரேசில் நாடாளுமன்ற உறுப்பினர்களும்,சகோதரர்களுமான லூயிஸ் ரிகார்டோ மிராண்டா, லூயிஸ் மிராண்டா இருவருக்கும் சந்தேகம் எழுந்ததால் விசாரணை ஆணையத்திற்கு ஆதாரத்துடன் புகார் அளித்துள்ளனர்.அதில் விலை மலிவான பைஸர் தடுப்பூசியை விடுத்து இந்தியாவின் கோவாக்சின் தடுப்பூசியை சுமார் 1.6 பில்லியன் ரெய்ஸ் அதாவது 323 மில்லியன் டாலர் இறக்குமதி செய்வதற்கு என்ன காரணம் என்று அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
அதுமட்டுமின்றி பிரேசில் அரசுக்கும் , இந்தியாவின் பாரத் பயோடெக் நிறுவனத்திற்கும் இடைத்தரகராக செயல்படுகின்ற பிரெகிஸா மெடிகாமென்டோஸ் என்ற நிறுவனமானது இந்த கோவாக்சின் தடுப்பூசி ஒப்பந்தம் மூலமாக அதிக அளவு லாபத்தை ஈட்டி உள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன. இந்த நிலையில் பாரத் பயோடெக் நிறுவனத்தின் அறிக்கையில் கோவாக்சின் தடுப்பூசியை பரிந்துரை செய்ததில் எந்த ஒரு ஊழல் நடைபெறவில்லை. இத்தகைய புகார்களை நாங்கள் திட்டவட்டமாக மறுக்கிறோம் என்றும் , மேடிசன் பயோடெக் நிறுவனம் எங்களுடைய சர்வதேச வர்த்தகத்தை கவனித்து வருகிறது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஜனாதிபதி ஜேர் பொல்சோனாரோ செய்தியாளர்கள் சந்திப்பில் கூறும்போது , கோவாக்சின் தடுப்பூசி ஒப்பந்தத்தில் எந்த ஒரு சிக்கலும் இல்லை என்றும் தடுப்பூசியை அதிக விலைக்கு கொள்முதல் செய்யவில்லை என்றார் .மேலும் ஊழல் கறைபடியாத என்மீதும் எனது அரசுக்கும் களங்கம் விளைவிக்கவே எதிர்க்கட்சிகள் இதுபோன்ற குற்றசாட்டுகளை முன்வைக்கின்றன என்று அவர் கூறியுள்ளார். இருந்தாலும் எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளுக்கு நாடாளுமன்ற குழு விசாரணையை தொடங்கியுள்ளது.