ஒகினவா நிறுவனம் தனது புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.
ஒகினவா நிறுவனம் தற்போது பல எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களை இந்தியாவில் அறிமுகம் செய்து வருகிறது. அதில் புதியதாக பிரெய்ஸ் புரோ எனும் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய ஸ்கூட்டரில் ஒகினவா பிரெய்ஸ்க்கு வழங்கப்பட்ட அனைத்து சிறப்பம்சங்களும் இதில் வழங்கப்பட்டுள்ளது. மேலும் , இதில் லீட் ஆசிட் பேட்டரிக்கு பதிலாக லித்தியம் அயான் பேட்டரி வழங்கப்பட்டுள்ளது.
இந்த ஸ்கூட்டரின் பேட்டரியை தனியாக கழற்றி சார்ஜ் ஏற்றக் கூடிய வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இதை முழுமையாக சார்ஜ் செய்ய 2 முதல் 3 மணி நேரம் ஆகும். மேலும், இந்த ஸ்கூட்டரை ஈக்கோ மோடில் வைத்து ஓட்டும்போது 110 கிமீ தூரம் வரையிலும், ஸ்போர்ட்ஸ் மோடில் வைத்து ஓட்டும்போது 90 கிமீ வரையில் பயணிக்கலாம். இந்த ப்ரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் 1kW பிஎல்டிசி வாட்டர்புரூப் மின் மோட்டார் கொடுக்கப்பட்டுள்ளது.
இதன் 2kW லித்தியம் அயான் பேட்டரியிலிருந்து மின் மோட்டாருக்கான மின் திறன் வழங்கப்படுகிறது. குறிப்பாக, இந்த ஸ்கூட்டரின் மின் மோட்டார் அதிகபட்சமாக 2,500 வாட்ஸ் திறனை வெளிப்படுத்தக் கூடியது. இதுமட்டுமின்றி 15 டிகிரி சரிவான சாலையிலும் எளிதாக செல்லும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர்,
சென்ட்ரல் லாக்கிங் சிஸ்டம், ஆன்ட்டி தெஃப் அலாரம், கீ லெஸ் இக்னிஷன், பார்க்கிங் லாட்டில் ஸ்கூட்டரை எளிதாக கண்டறியும் நுட்பம், மொபைல் சார்ஜர் போன்ற வசதிகளும் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த புதிய ஒகினவா பிரெய்ஸ் புரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலை ரூ.71,990 என அந்நிறுவனம் நிர்ணயித்துள்ளது.