நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன் முக்கிய பகுதியாக பெரும்பாலான மாநிலங்களில் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. சில மாநிலங்களில் கொரோனா பாதிப்பு குறைந்து வந்தாலும், கொரோனா முழுமையாகக் கட்டுக்குள் வரும் வரை ஊரடங்கு தொடரும் என மாநில அரசுகள் தெரிவித்து வருகிறது. அதன்படி சில தளர்வுகள் அளிக்கப்பட்டு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் டெல்லியில் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்துள்ளதால் நாளை முதல் ஊரடங்கில் தளர்வுகள் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி உடற்பயிற்சிக் கூடங்கள், அழகு நிலையங்கள் திறக்க அனுமதிக்கப்படும் என்று டெல்லி அரசு அறிவித்துள்ளது. பூங்காக்களை திறக்கவும் கோல்ஃப் உள்ளிட்ட விளையாட்டு மைதானங்களை திறக்கவும் யோகா நிலையங்கள் 50 சதவீத நபர்களுடன் திறக்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதர மாநிலங்களில் இருந்து டெல்லி வருவதற்கு இ பாஸ் தேவையில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மதுபான விடுதிகள் 50 சதவீத வாடிக்கையாளர்களுடன் 12:00 மணி முதல் இரவு 10 மணி வரையிலும், உணவகங்கள் காலை 12 மணி முதல் இரவு 10 மணி வரை செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த புதிய தளர்வுகள் அனைத்தும் நாளை முதல் அமலுக்கு வருகிறது.