ஆறாம் வகுப்பு படிக்கும் சிறுமி பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள கொடிக்கால் பகுதியில் கூலித் தொழிலாளியான மகேஷ் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு சரிகா என்ற மனைவி இருக்கின்றார். இந்த தம்பதிகளுக்கு ஆறாம் வகுப்பு படிக்கும் தனலட்சுமி என்ற மகள் இருந்துள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பு தனலட்சுமி வீட்டில் விளையாடிக் கொண்டிருக்கும் போது அவரின் தாயாரான சரிக்கா பள்ளிகள் சீக்கிரம் திறக்க உள்ளதால் இனிமேல் விளையாடாமல் படிப்பில் ஆர்வம் காட்டு என்று தனலட்சுமியிடம் தெரிவித்துள்ளார். இதனை கேட்ட தனலட்சுமி மிகுந்த பயத்தில் இருந்துள்ளார்.
இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தனலட்சுமி செடிகளுக்கு தெளிப்பதற்காக வைத்திருந்த பூச்சிக்கொல்லி மருந்தை எடுத்து குடித்து விட்டு உறங்கச் சென்றுவிட்டார். இதனையடுத்து வெளியே சென்று விட்டு வீடு திரும்பிய தனலட்சுமியின் பெற்றோர் தனது மகள் உறங்கி விட்டார் என்று நினைத்து தங்களின் வேலை செய்து கொண்டிருந்தனர். அப்போது உறங்கிக்கொண்டிருந்த தனலட்சுமி திடீரென எழுந்து வாந்தி எடுத்து மயக்கம் போட்டு கீழே விழுந்து விட்டார் .
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த தனலட்சுமியின் பெற்றோர் அவரை உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக அப்பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு தனலட்சுமியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் மருத்துவமனைக்கு விரைந்து சென்று தனலட்சுமியின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.