ஐக்கிய நாடுகள் ஆப்பிரிக்க நாடான புர்கினா பாசோவில் 12 முதல் 14 வயதுடைய சிறுவர்களால் 130 பேர் கொல்லப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.
ஆப்பிரிக்க நாடான புர்கினா பாசோவில் உள்ள Solhan என்னும் கிராமத்திற்குள் கடந்த ஜூன் 4-ஆம் தேதி அன்று இரவில் துப்பாக்கியோடு நுழைந்த சிலர் அங்கிருந்த அப்பாவி மக்கள் அனைவரையும் கொலை செய்ததோடு அந்த கிராமத்திற்கு தீ வைத்துவிட்டு தப்பி ஓடியுள்ளனர். அந்த பயங்கரவாத தாக்குதலில் 130 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். புர்கினா பாசோ அரசாங்கம் இதுவரை நாட்டில் நடந்த தீவிரவாத தாக்குதலில் இது மிகவும் பயங்கரமான ஒன்று என கூறியுள்ளது.
மேலும் ஐக்கிய நாடுகள் மன்றம் 12 முதல் 14 வயதுடைய சிறுவர்களால் இந்த தாக்குதல் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. அதோடு மட்டுமின்றி இந்த சிறுவர்கள் அனைவரும் ஐ.எஸ் போன்ற தீவிரவாத அமைப்புகளால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் என்று அறிக்கை வெளியிட்டுள்ளது. இதுவரை புர்கினா பாசோவில் 1.14 மில்லியன் மக்கள் தொடர் தாக்குதல்களால் அகதிகளாக்கப்பட்டுள்ளனர்.
அதேசமயம் சுமார் 20,000 அகதிகள் அண்டை நாடான மாலியிலிருந்து புர்கினா பாசோவில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் அந்நாட்டின் அரசாங்க அதிகாரிகள் இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து சுமார் 500 மக்கள் கொல்லப்பட்டுள்ளதாக பரபரப்பு தகவலை தெரிவித்துள்ளனர்.