தார் எந்திரத்தில் சிக்கி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கரூர் மாவட்டத்தில் உள்ள அய்யம்பாளையம் பகுதியில் தார் கலவை ஆப்பரேட்டரான காளியப்பன் என்பவர் வசித்து வந்தார். இந்நிலையில் காளியப்பன் திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள குப்பமுத்துபட்டி – அதிகாரிபட்டி பகுதியில் தார் சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அதன் பின்னர் காளியப்பன் தார் கலவை செய்யும் எந்திரத்தில் மணல், தார் மற்றும் ஜல்லிகற்களை போட்டு கலவை செய்து கொண்டிருந்தார். இதனை அடுத்து எந்திரத்தில் திடீரென தீ பற்றி எரிந்ததில் பதற்றமடைந்த காளியப்பன் கலவை எந்திரத்தில் இருந்து தாவி வெளியே குதித்து விட்டார்.
அப்போது தாவி குதித்த காளியப்பன் கலவை எந்திரத்தில் சிக்கி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் காளியப்பனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.