திமுக காங்கிரஸ் கூட்டணி சின்னாபின்னமாக போகின்றது என்பதை இரு கட்சி தலைவர்களின் பேச்சில் நம்மால் உணர முடியும்.
கடந்த ஜூன் மாதம் காங்கிரஸ் கட்சியின் அப்போதைய தென் சென்னை மாவட்ட தலைவர் கராத்தே தியாகராஜன் பேச்சும், அதற்கு முன்னாள் அமைச்சரும் திருச்சி மாவட்ட திமுக செயலாளருமான கே.என்.நேரு பேசிய பேச்சும் திமுக- காங்கிரஸ் கூட்டணியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தின. அப்போது கே.என்.நேரு திமுக_வால் இன்னும் எத்தனை நாட்களுக்கு காங்கிரஸ் கட்சியை தூக்கி சுமக்க முடியும் என்று கேள்வி எழுப்பினர். இப்படி நிர்வாகிகளிடையே நடந்து கொண்டு இருந்த மோதல் தற்போது தலைவர்களிடையே பிரதிபலிக்கின்றது.இதனால் திமுக – காங்கிரஸ் கூட்டணி காலியாகும் நிலையில் உள்ளது.
செப்டம்பர் 5_ஆம் தேதி திருப்பூரில் திமுக முன்னாள் அமைச்சர் கண்ணப்பன் எழுதிய வாழ்வும் , பணிவும் என்ற நூல் வெளியிட்டு விழாவில் கலந்துகொண்டு பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், ’1971ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் 184 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது போல, வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளில் குறைந்தபட்சம் 200 சட்டமன்ற தொகுதிகளில் வெற்றிப் பெற்று ஆட்சி அமைக்க வேண்டும். அடுத்த 25 வருடத்திற்கு திமுக ஆட்சியை யாராலும் தொட்டுக்கூட பார்க்க முடியாதவாறு நாம் ஆட்சி நடத்த வேண்டும் என்று பேசினார்.
அப்போது அங்கிருந்த நிர்வாகிகள் மற்றும் அரசியல் விமர்சகர்களுக்கு எழுந்த ஒரே கேள்வி ஸ்டாலின் 200 தொகுதி என்று சொன்னது திமுக மட்டுமா ? அல்ல திமுக கூட்டணியா என்ற பெரும் கேள்வி விவாதமாக எழுந்தது.ஸ்டாலின் இந்த கருத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையில் தான் அடுத்த நாளே செப்டம்பர் 6 ஆம் தேதி நாங்குநேரியில் நடந்த காங்கிரஸ் கட்சியின் செயல்வீரர்கள் கூட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தனது கருத்தை தெரிவித்துள்ளார்.
அதில் , காங்கிரஸ் கட்சி தனித்து நின்று வெற்றிபெற முடியாதா? காங்கிரஸ் கட்சி பலமாக இருக்கும் தென்மாவட்டங்களில் கூட்டணி இல்லாமல் வெற்றிபெற முடியுமா? என்பதைப் பற்றி விவாதிக்கவே இந்தக் கூட்டம் என்ற காங்கிரஸ் தலைவரின் கருத்து 200 தொகுதிகளில் நாம்தான் வெற்றிபெறுவோம் என்ற ஸ்டாலினின் கருத்துக்கு எதிர்வினையாகவே பார்க்கப்பட்டது. அதே போல நாங்குநேரி சட்டமன்ற தேர்தலில் திமுக நிற்கவேண்டுமென்று உதயநிதிஸ்டாலின் கருத்து தெரிவித்த நிலையில் இந்த கூட்டத்தில் நாங்குநேரி சட்டமன்ற தேர்தலில் நிற்கும் காங்கிரஸ் கட்சி வேட்பாளரை வெற்றி பெற வைக்கவேண்டுமென்று தீர்மானமும் நிறைவேற்ற பட்டது.
இந்த சூழலில் தான் திமுக, காங்கிரஸ் என இரு தரப்பு தலைவர்களான ஸ்டாலின், அழகிரி ஆகியோர் பேசிய கருத்துகள் முக்கியத்துவம் பெறுகின்றது.ஏற்கனவே திமுகவின் பல்வேறு நிர்வாகிகள் காங்கிரஸ் கட்சியால் நாம் ஜெயிக்கல. நம்மாலதான் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது.அதனால் வருகின்ற காங்கிரஸுக்கு அள்ளிக்கொடுக்காம திமுகவே அதிக இடங்கள்ல போட்டியிட வேண்டுமென்று திமுக தலைவர் ஸ்டாலினிடம் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
அதே நேரத்தில் முக. ஸ்டாலினும் ஜெயலலிதா பாணியில் நாமும் எல்லா இடங்களிலும் தனித்து நின்று தேர்தலை சந்தித்தால் என்ன என்ற எண்ணத்தை மேலோங்கி வைத்துள்ளதன் வெளிப்பாடுதான் அவருடைய திருப்பூர் பேச்சு. மொத்தத்தில் இதை ஆராய்ந்து பார்க்ககையில் காங்கிரஸ் கட்சியின் அழகிரி எப்போதும் நிதானமாக பேசக் கூடியவர். வைகோவுக்கும், காங்கிரஸுக்கும் இடையில் அண்மையில் மோதல் வெடித்தபோது ஸ்டாலின் அமைத்த அற்புதமான சிற்பம் போன்ற கூட்டணிக்கு ஆபத்து வந்துவிடக் கூடாது என்று ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.
இந்தநிலையில் தான் KS.அழகிரி நாங்குநேரியில் காங்கிரஸ் கட்சி தனித்துப் போட்டி என்ற அளவுக்குப் பேசியிருக்கிறார் என்றால் காங்கிரஸ் கட்சியின் மேலிட அனுமதி இல்லாமல் பேசியிருப்பாரா என்ற கேள்வியும் எழுகிறது. சில நாட்களுக்கு முன் சத்தியமூர்த்தி பவனில் நடந்த காங்கிரஸ் கட்சியின் சமூக தள காங்கிரஸார் கூட்டத்தில்., தன்னைத் தலைவராக நீடிக்க விட்டால் காங்கிரஸுக்கு 100 எம்.எல்.ஏ.க்களை பெற்றுத் தருவேன் என்று அழகிரி பேசி இருந்ததும் கூட்டணி விரிசலை உறுதி பட கூறுகின்றது.
அதே சூழலில் திமுக காங்கிரசை தந்து கூட்டணியில் இருந்து கழற்றிவிடவில்லையென்றால் பல அரசியல் விளைவுகளை சந்திக்க வேண்டும் என்று பாஜக திமுகவுக்கு நிர்பந்தம் விதிப்பதாகவும் அதனால் காங்கிரஸ் கட்சியை கூட்டணியில் இருந்து கழட்டி விட முக.ஸ்டாலின் 200 தொகுதியில் திமுக வெற்றி பெரும் என்று கூறியதாக காஙகிரஸ் சீனியர்கள் நிர்வாகிகள் கூறுகின்றனர். என்னதான் இருந்தாலும் விரைவில் வருகின்ற உள்ளாட்சி தேர்தலில் கூட்டணி குறித்த முழு தீர்வு கிடைக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. பொறுத்திருந்து பார்ப்போம்.