இரட்டை கொலை செய்த வழக்கில் காவல்துறையினர் 2 வாலிபர்களை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சுனாமி காலனி பகுதியில் ஜேசுராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். குண்டல் பகுதியில் செல்வின் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர்கள் இருவரும் கன்னியாகுமரி நான்கு வழிசாலை முருகன் குன்றம் பகுதியில் உள்ள முட்புதரில் பிணமாக கிடந்தனர். இதுகுறித்து தகவலறிந்த டி.எஸ்.பி பாஸ்கரன் மற்றும் இன்ஸ்பெக்டர்கள் ஆவுடையப்பன், ஜெயச்சந்திரன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஜேசுராஜ், செல்வன் ஆகிய இருவரின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் சின்ன முட்டத்தை சேர்ந்த ஜெனிஸ் என்பவர் கத்தி குத்து காயங்களுடன் ஆசாரிபள்ளம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவது தெரியவந்துள்ளது.
இதனையடுத்து காவல்துறையினர் ஜெனி சிடம் விசாரணை நடத்தினர். அதன்பின் கொலையாளிகளை கண்டுபிடிக்க 6 தனிப்படை கொண்ட குழு அமைக்கப்பட்டு காவல்துறையினர் பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டனர். அப்போது கஞ்சா விற்பனையில் ஏற்பட்ட தகராறில் கொலை நடந்திருப்பது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனால் கஞ்சா வியாபாரிகளை காவல்துறையினர் கண்காணித்து வந்துள்ளனர். அப்போது கொலை செய்யப்பட்டவர்களுக்கு அகஸ்தீஸ்வரம் பகுதியைச் சேர்ந்த கஞ்சா வியாபாரியிடம் தொடர்பு இருந்தது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனைத்தொடர்ந்து காவல்துறையினர் கஞ்சா வியாபாரியுடன் தொடர்பில் இருந்த அகஸ்தீஸ்வரம் பகுதியை சேர்ந்த பாக்கீஸ்வரன், முத்துக்குமார் ஆகிய 2 பேரையும் காவல்துறையினர் பிடித்து அவரிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.
அதன்பின் அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக தகவல்களை தெரிவித்ததால் சந்தேகமடைந்த காவல்துறையினர் இருவரையும் ரகசிய இடத்திற்கு கொண்டு சென்று விசாரணை மேற்கொண்டனர் . அப்போது ஜேசுராஜ், செல்வின் இருவரையும் கொலை செய்ததை அவர்கள் ஒப்புக்கொண்டனர். இதனையடுத்து காவல்துறையினர் பாக்கீஸ்வரன், முத்துக்குமார் ஆகிய இருவரின் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். இதுகுறித்து கொலையாளியின் வாக்குமூலம் “நாங்கள் இருவரும் மோட்டார் சைக்கிளில் முருகன் குன்றம் பகுதிக்கு சென்றபோது அங்கே இருந்த ஜெனிஸ், ஜேசுராஜ், செல்வின் ஆகிய 3 பேரும் கஞ்சா பொட்டலங்களை கேட்டனர். அதற்கு நாங்கள் பணம் கேட்டதால் அவர்கள் பணம் தராமல் எங்களிடம் இருந்த கஞ்சா பொட்டலங்களை பறிக்க முயன்றதுடன் எங்களை சரமாரியாக தாக்கினர். இதனால் ஆத்திரமடைந்த நாங்கள் ஜெனிசை குத்தியதால் அவர் அங்கிருந்து தப்பி சென்று விட்டார்.
ஆனால் மற்ற இருவரும் தொடர்ந்து தகராறில் ஈடுபட்டதால் நாங்கள் அவர்களையும் கத்தியால் குத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்று விட்டோம். எனவே பல மணி நேரத்திற்கு பிறகுதான் ஜேசுராஜ், செல்வன் இருவரும் இறந்த தகவல் எங்களுக்கு தெரியவந்தது. இதனால் காவல்துறையினர் எங்களை பிடித்து விடுவார்கள் என்ற பயத்தில் தப்பிச் செல்ல முயன்றோம். ஆனால் எங்களை காவல்துறையினர் பிடித்து விட்டனர் என்று அவர்கள் வாக்குமூலம் கொடுத்தனர்.” இவ்வாறு கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட பாக்கீஸ்வரன், முத்துக்குமார் இருவரிடமும் வேறு நபர்களுக்கு தொடர்பு இருக்கிறதா என்ற கோணத்தில் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.