கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் ஒரே நாளில் 7 ஆயிரத்து 350-க்கும் மேற்பட்டோர் தடுப்பூசி செலுத்தி கொண்டனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் சிறப்பு முகாம்கள் மற்றும் அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் ஆகியவற்றின் மூலம் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றது. இதுவரையிலும் 3 லட்சத்து 18 ஆயிரத்து 943 நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. எனவே மாவட்டத்தில் 37 இடங்களில் கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்று வருகின்றது. நாகர்கோவில் நகரில் தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடை பெறவில்லை. ஆனால் வருவாய்துறை ஊழியர்கள் மற்றும் சுகாதார பணியாளர்கள் உள்ளிட்ட முன்களப் பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதனால் காலையில் இருந்து வருவாய்த்துறை ஊழியர்கள் மற்றும் களப்பணியாளர்கள் அனைவரும் நீண்ட வரிசையில் காத்திருந்து தடுப்பூசி செலுத்தி கொண்டனர்.
இந்த முகாமில் 350-க்கும் மேற்பட்டோற்க்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதேபோன்று மாவட்டம் முழுவதிலும் 18 வயது முதல் 44 வயதுக்குட்பட்டவர்களுக்கு, 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் 20 இடங்களில் தடுப்பு சிறப்பு முகாம் நடைபெற்றது. மேலும் 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு மட்டும் அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் என 16 இடங்களில் தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்றது. இந்த முகாம்கள் அனைத்திலும் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ஆர்வத்துடன் தடுப்புச் செலுத்திக் கொண்டனர். இவ்வாறு நேற்று ஒரே நாளில் 37 இடங்களில் 7 ஆயிரத்து 350 க்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் தடுப்பூசி செலுத்தியவர்கள் எண்ணிக்கை 3 1/4 லட்சத்தை கடந்துள்ளது.