மோட்டார் சைக்கிள் விபத்தில் வாலிபர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள திருவிதாங்கோடு புதுதெரு பகுதியில் சியாத் என்பவர் சமையல் வேலை பார்த்து வந்துள்ளார். இவர் அதே பகுதியைச் சேர்ந்த தஸ்லீமா என்பவரை கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 3 வயதில் ஒரு மகள் இருந்த நிலையில் கடந்த மாதம் ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில் சியாத் தக்கலை செட்டியார்விளையை சேர்ந்த உறவினர் சோயாப் என்பவரின் மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்து குமாரபுரத்தில் இருந்து தக்கலை நோக்கி சென்று கொண்டிருந்தார்.
அப்போது அவ்வழியாக நாய் ஒன்று குறுக்கே சென்றதால் மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி விபத்து ஏற்பட்டு இருவரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். இதனையடுத்து அருகில் இருந்தவர்கள் சியாத், சோயாப் இருவரையும் மீட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அதன்பின் சியாத் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சியாத் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து கொற்றிகோடு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.