கடைசி நிமிட பின்னடைவு நிரந்தரமானதல்ல. நிலவை தொடும் முயற்சி நிச்சயம் வெற்றியடையும் என்று பிரதமர் மோடி விஞ்ஞானிகளுக்கு ஊக்க உரையாற்றினார்.
சந்திரயான் 2 திட்டத்தின்படி இன்று அதிகாலை விக்ரம் லேண்டர் தரையிறங்கும் பணி தொடங்கப்பட்டது. நிலவின் தென் துருவ பகுதியில் எந்த ஒரு நாடும் இதுவரை லேண்டரை தரையிறக்கியதில்லை என்பதால் நாட்டு மக்கள் அனைவரும் எதிர்பார்ப்புடன் திக் திக் 15 நிமிடத்தில் காத்திருந்தனர். பிரதமர் மோடியும் இஸ்ரோ மையத்தில் ஆர்வமுடன் காத்திருந்தார். லேண்டர் நிலவில் தரையிறங்க 2.1 கிமீ தூரத்தில் இருக்கும்போது தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது.
இதையடுத்து பிரதமர் மோடி இன்று காலை 8 மணிக்கு பெங்களூரூ இஸ்ரோ கட்டுப்பாட்டு மையத்தில் விஞ்ஞானிகள் மத்தியில் பிரதமர் மோடி ஊக்க உரையாற்றினார். பாரத் மாதா கி ஜெய் என்றமுழக்கத்துடன் தனது உரையை தொடங்கிய பிரதமர் மோடி, இஸ்ரோ விஞ்ஞானிகளால் இந்தியா பெருமை கொள்கிறது. சந்திரயான்-2 திட்டத்துக்காக தூக்கமின்றி பல நாட்கள் விஞ்ஞானிகள் உழைத்துள்ளனர். இரவு-பகலாக உழைத்த இஸ்ரோ விஞ்ஞானிகளால் இந்தியா பெருமை கொள்கிறது.
மேலும் பேசிய அவர், இஸ்ரோ விஞ்ஞானிகளின் உழைப்பு ஈடு இணையற்ற ஒன்று. கடைசி நிமிட பின்னடைவு நிரந்தரமானதல்ல. நிலவை தொடும் முயற்சி நிச்சயம் வெற்றியடையும். நமது விண்வெளி திட்டத்தில் புதிய உச்சங்கள் இனிமேல்தான் வரவுள்ளன. அறிவியல் ஆராய்ச்சியில் தோல்வி என்பதே கிடையாது. இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு ஆதரவாக நாடே ஆதரவாக நிற்கும் என்று ஊக்கமளித்தார். பிரதமர் மோடியின் ஊக்க உரையை கேட்ட பெண் விஞ்ஞானிகள் சிலர் உணர்ச்சிப் பெருக்கால் கண்ணீர் விட்டனர். உரையை முடித்து விட்டு கிளம்பும் போது இஸ்ரோ தலைவர் சிவன் கண்ணீர் விட்டு அழும்போது கட்டிப்பிடித்து அவரை பிரதமர் மோடி தேற்றினார்.