தூக்கில் தொங்கியபடி முதியவர் சடலமாக கிடந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் கிருஷ்ணன் காரணை பேருந்து நிறுத்தம் அருகில் உள்ள வேப்பமரத்தில் 60 வயதுடைய முதியவர் ஒருவர் சேலையால் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக காணப்பட்டார். இதுகுறித்து தகவலறிந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் நடராஜன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று முதியவர் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதனையடுத்து காவல்துறையினர் கூறியபோது, முதியவர் பிள்ளைகளால் கைவிடப்பட்ட தந்தையாக இருக்கலாம் என்றும் வாழ்க்கையில் மனமுடைந்து இவர் தற்கொலை முடிவை எடுத்திருக்கலாம் என்றும் சந்தேகிக்கின்றனர்.
இதனைதொடர்ந்து காவி வேட்டி அணிந்து இருந்த முதியவர் சட்டைப்பையில் சென்னை மாநகர பேருந்தில் பயணம் செய்வதற்கான பயணச் சீட்டு ஒன்று இருந்தது. இதனால் முதியவர் சென்னை புறநகர் பகுதியை சேர்ந்தவராக இருக்கலாம் என காவல்துறையினர் தரப்பில் தெரியப்படுத்துகிறது. ஆனால் இவர் எந்த ஊர்? யார் என்பது காவல்துறையினருக்கு தெரியவில்லை. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் முதியவர் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.