முன்விரோதம் காரணமாக விவசாயியை தாக்கிய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
அரியலூர் மாவட்டத்தில் உள்ள தா.பழூர் பகுதியில் செல்வராசு என்பவர் வசித்து வருகிறார். இவர் விவசாயம் செய்து வருகிறார். இதனையடுத்து கடந்த சில நாட்களாக இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் தொல்காப்பியன் என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் செல்வராசு கோடங்குடி பகுதியில் இருக்கும் அவரது நிலத்திற்கு சென்றபோது தொல்காப்பியனுக்கும், செல்வராசுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இதனைப் பார்த்ததும் அருகில் இருந்தவர்கள் இருவரையும் தடுக்க முயற்சித்த போது தொல்காப்பியன் அவர்களை மிரட்டியுள்ளார். மேலும் தொல்காப்பியன் செல்வராசை தகாத வார்த்தைகளால் பேசியதோடு அவரை சரமாரியாக தாக்கியுள்ளார். அதன்பின் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த செல்வராசு காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளார். மேலும் அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தொல்காபியனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.