புதுச்சேரியில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் என்.ஆர்.காங்., -பா.ஜ., கூட்டணி வெற்றி பெற்றது.என்.ஆர்.காங்., தலைவர் ரங்கசாமி மே 7ல் முதல்வராக பதவியேற்றார். பதவி பங்கீட்டில் நீண்ட இழுபறிக்கு பின் கடந்த 23ல் முதல்வர் ரங்கசாமி அமைச்சரவை பட்டியலை கவர்னர் தமிழிசையிடம் சமர்ப்பித்தார். என்.ஆர்.காங்கிரசை சேர்ந்த லட்சுமிநாராயணன், தேனீ ஜெயக்குமார், சந்திரபிரியங்கா, பா.ஜ.,வின் நமச்சிவாயம், சாய் சரவணன்குமார் ஆகியோரை அமைச்சர்களாக நியமிக்க மத்திய உள்துறை நேற்று முன்தினம் ஒப்புதல் அளித்தது.
அதன்படி இன்று பிற்பகல் 2:30 மணியளவில் கவர்னர் மாளிகை எதிரில் அமைக்கப்பட்டுள்ள மேடையில் பதவியேற்பு விழா நடைபெற்றது. புதிய அமைச்சர்களுக்கு கவர்னர் தமிழிசை, பதவிப்பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். 40 ஆண்டுகளுக்கு பிறகு புதுச்சேரி அமைச்சரவையில் பெண் ஒருவர் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.