கிணற்றில் தவறி விழுந்த தொழிலாளியை தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தென்காசி மாவட்டத்திலுள்ள சங்கரன்கோவில் பகுதியில் தங்கப்பாண்டியன் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆடு மேய்க்கும் தொழில் செய்து வந்துள்ளார். இந்நிலையில் வழக்கம்போல் தனது ஆடுகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்ற தங்கப்பாண்டியன் எதிர்பாராதவிதமாக அருகில் இருந்த கிணற்றில் தவறி விழுந்தார். மேலும் கிணற்றில் 5 அடி ஆழத்திற்கு தண்ணீர் இருந்ததால் தங்கபாண்டியன் வெளியே வர முடியாமல் தண்ணீரில் தத்தளித்துள்ளார். அதன்பின்னர் தங்கபாண்டி அருகில் உள்ள துவாரபகுதியில் ஏறி உட்கார்ந்துள்ளார். இந்நிலையில் நீண்டநேரமாகியும் தங்கபாண்டியன் வீட்டிற்கு திரும்பி வராததால் அவரது குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்தும் அவர் கிடைக்கவில்லை.
இதனையடுத்து மறுநாள் அதிகாலையில் அந்த வழியாக சென்ற சில பேர் கிணற்றிலிருந்து சத்தம் வருவதை கேட்டு எட்டி பார்த்த போது தங்கபாண்டியன் கிணற்றுக்குள் இருந்தது தெரியவந்துள்ளது. அதன்பின் அவர்கள் உடனே தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர். அந்த தகவலின்படி விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் கிணற்றில் கயிறு கட்டி தங்கபாண்டியை மீட்டனர். மேலும் தங்கபாண்டியனை காப்பாற்றியதால் அங்குள்ள பொதுமக்கள் தீயணைப்பு வீரர்களை பாராட்டி வருகின்றனர்.