கஞ்சா வைத்திருந்த 6 பேரை காவல்துறையினர் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் கஞ்சா விற்பனையில் ஏற்பட்ட மோதலால் 2 பேர் கொலை செய்யப்பட்டனர். இதனையடுத்து மாவட்டம் முழுவதிலும் கஞ்சா விற்பனை செய்பவர்களை கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரிநாராயணன் காவல்துறையினருக்கு உத்தரவிட்டார். இந்நிலையில் கோட்டார் சப் இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் தலைமையில் காவல்துறையினர், அழகம்மன் கோவில் பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு கஞ்சா வைத்திருந்த பறைகால் மடத் தெருவை சேர்ந்த ரஜினி என்பவரை காவல்துறையினர் கைது செய்து அவரிடமிருந்து 150 கிராம் கஞ்சா பொருட்களை பறிமுதல் செய்தனர்.
இதனையடுத்து கம்பளம் பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர் செல்வநாராயணர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்ட போது கஞ்சா வைத்திருந்த வடிவீஸ்வரம் பகுதியை சேர்ந்த வெங்கடேஷ் என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 100 கிராம் கஞ்சா பொருட்களை பறிமுதல் செய்தனர். இதேபோன்று வடசேரி சப்-இன்ஸ்பெக்டர் சத்தியசோபன் தலைமையில் காவல்துறையினர் பள்ளிவிளை பகுதியில் தீவிர ரோந்து பணிக்கு சென்றபோது கஞ்சா வைத்திருந்த ராஜன் என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 100 கிராம் கஞ்சா பொருட்களை பறிமுதல் செய்தனர். கன்னியாகுமரி காவல்துறையினர் கஞ்சா வைத்திருந்த ஜவகர் என்பவரையும், கருங்கல் காவல்துறையினர் அருள்தாஸ் என்பவரையும், கோட்டார் காவல்துறையினர் பாலாஜி என்பவரையும் கைது செய்து அவரிடமிருந்து 700 கிராம் கஞ்சா பறிமுதல் செய்தனர்.