காவல் நிலையத்தின் முன்பு ஆட்டோ டிரைவர் குடும்பத்துடன் தீக்குளிக்க முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டத்தில் உள்ள பெரிய மிளகுபாறை பகுதியில் சந்தியாகப்பர் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனக்கு சொந்தமாக ஆட்டோ வைத்து ஓட்டி வருகின்றார். இந்நிலையில் இவருக்கும், இவரது அத்தையான மார்க்ரெட் என்பவருக்கும் இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பான வழக்கு திருச்சி நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கின்றது. இதனையடுத்து சந்தியாகப்பர் தனது கூரை வீட்டிற்கு ஆஸ்பெட்டாஸ் போடுவதற்கு ஏற்பாடு செய்துவந்த நிலையில் மார்க்ரெட் அதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
அப்போது சந்தியாகப்பர் வசிக்கும் இடம் தனக்கு சொந்தம் எனவும், அதில் புதிதாக பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள கூடாது எனவும் மார்க்ரெட் சண்டை போட்டுள்ளார். இதனையடுத்து தனது குடும்பத்துடன் கன்டோன்மென்ட் காவல் நிலையத்திற்கு சென்ற சந்தியாகப்பர் கேனில் வைத்திருந்த மண்ணெண்ணையை உடல் முழுவதும் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்ய முயன்றுள்ளார். இதனை பார்த்ததும் அவர் மீது தண்ணீரை ஊற்றி காவல்துறையினர் சமாதானம் செய்தனர். அதன்பிறகு காவல்துறையினர் இருதரப்பினரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி அனுப்பி வைத்துள்ளனர்.