சந்திரயான்-2 விண்கலத்தை ஏவுவதற்கு அயராது பாடுபட்ட விஞ்ஞானிகளின் உழைப்பு பாராட்டுக்குரியது என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இன்று அதிகாலை சந்திரயான் 2 திட்டத்தின்படி விக்ரம் லேண்டர் தரையிறங்கும் பணி தொடங்கப்பட்டது. நிலவின் தென் துருவ பகுதியில் எந்த ஒரு நாடும் இதுவரை லேண்டரை தரையிறக்கியதில்லை என்பதால் இந்த அரிய நிகழ்வு அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டது. பிரதமர் மோடி பெங்களூரு இஸ்ரோ மையத்திற்கு ஆர்வமுடன் இதனை காண வந்திருந்தார். விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்க 2.1 கிமீ தூரத்தில் இருக்கும்போது தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டு சிக்னல் கிடைக்கவில்லை.
இஸ்ரோ தலைவர் சிவன் லேண்டரில் இருந்து சிக்னல் கிடைக்கவில்லை என்று சற்று வருத்தத்துடன் அறிவித்தார். இதையடுத்து பிரதமர் மோடி கடைசி நிமிட பின்னடைவு நிரந்தரமானதல்ல என்றும், எதிர்வரும் விண்வெளி திட்டங்களில் விஞ்ஞானிகள் சாதிப்பார்கள் என்று நம்பிக்கையூட்டினார். அதேபோல அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் மற்றும் நாட்டு மக்கள் உட்பட பல்வேறு தரப்பினரும் வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர்.
அந்தவகையில், தமிழக முதல்வர் பழனிசாமி இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது, சந்திரயான்-2 விண்கலத்தை ஏவும் திட்டத்திற்கு அயராது பாடுபட்ட விஞ்ஞானிகளின் உழைப்பு பாராட்டுக்குரியது. இஸ்ரோ விஞ்ஞானிகள் மேலும் பல திட்டங்களில் கண்டிப்பாக வெற்றி பெறுவார்கள். புது நம்பிக்கையுடனும் ஊக்கத்துடனும் செயல்பட்டு வெற்றிகள் பல பெற வாழ்த்துகள் என்று தெரிவித்துள்ளார்.