காணாமல் போன சப்-இன்ஸ்பெக்டர் முந்திரி தோப்பில் மயங்கிய நிலையில் மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாவட்டத்தில் உள்ள உவரி கடலோர பாதுகாப்பு குழும காவல் நிலையத்தில் கோபி என்பவர் சப்-இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் வேலைக்கு சென்ற கோபி நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு திரும்பி வராததால் அவரது மனைவி ராஜேஸ்வரி காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சப்-இன்ஸ்பெக்டரை தீவிரமாக தேடி வந்துள்ளனர். இதனையடுத்து அப்பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான முந்திரி தோப்பில் மோட்டார்சைக்கிள் கோபி மீது விழுந்து மயங்கிய நிலையில் இருந்துள்ளார்.
இதனை பார்த்ததும் முந்திரி தோப்பின் உரிமையாளர் உடனடியாக கோபியை மீட்டு அவரை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளார். அதன்பின் கோபியை தனியார் மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகின்றனர். இது குறித்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் முந்திரி பழம் பறிக்கச் சென்ற போது உடல்நல குறைவால் கோபி மயங்கி விழுந்தது தெரியவந்துள்ளது.