யானைகள் பொதுமக்களை துரத்தியதோடு, குடியிருப்பு பகுதிகளை முற்றுகையிட்ட சம்பவம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரி மாவட்டத்திலுள்ள பந்தலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகிறது. இந்த பகுதிகளில் வசிக்கும் விவசாயிகள் தங்களது தோட்டங்களில் பாக்கு, வாழை, தென்னை போன்றவற்றை சாகுபடி செய்துள்ளனர். இந்நிலையில் திடீரென வனப்பகுதியில் இருந்து இரவு 7 மணி அளவில் காட்டு யானைகள் ஊருக்குள் புகுந்து பொதுமக்களை துரத்தி உள்ளது.
இதனை தொடர்ந்து அந்த காட்டு யானைகள் பஞ்சைகொள்ளி பகுதிக்குள் நுழைந்து குடியிருப்புகளை முற்றுகையிட்டதால் பொது மக்கள் வெளியே வர முடியாமல் சிரமப்பட்டு உள்ளனர். அதன் பின் காட்டு யானைகள் அங்கும் இங்கும் நடந்து சென்று சிறிது நேரத்தில் வனப்பகுதிக்குள் சென்று விட்டது. இதனை அடுத்து வனத்துறையினர் அந்த காட்டு யானைகளின் நடமாட்டத்தை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.