கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று முதல் பேருந்து போக்குவரத்து தொடங்கப்பட்டு இருக்கின்றது.
தமிழகத்தில் கொரோன தொற்றின் 2-வது அலையை கட்டுப்படுத்தும் விதமாக தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் இருக்கின்றது. அதன்படி பேருந்து போக்குவரத்து, சந்தைகள் செயல்படவும் அரசு அனுமதி வழங்கி இருக்கின்றது. இந்த புதிய தளர்வுகளின் ஊரடங்கு இன்று (திங்கட்கிழமை) முதல் அமலில் இருப்பதனால் கன்னியாகுமரி மாவட்டத்தில் அரசு பேருந்துகளை இயக்குவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பேருந்துகளை தூய்மை செய்து பராமரிப்பு பணிகளை மேற்கொண்டனர். எனவே மாவட்டத்தில் முதற்கட்டமாக 500 பேருந்துகள் இயக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு நாகர்கோவில்-சென்னைக்கு அரசு விரைவு பேருந்துகளை இயக்கி பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதனையடுத்து மீனாட்சிபுரம் பணிமனையில் இருந்து புறப்பட்டு சுமார் 20 கிலோமீட்டர் தூரம் வரை பரிசோதனை முறையில் பேருந்துகள் இயக்கப்பட்டன. கொரோனா தொற்று அதிகம் உள்ள மாவட்டங்களை தவிர்த்து பிற மாவட்டங்களுக்கு பேருந்துகள் இயக்கப்பட இருக்கின்றது. இந்த மாவட்டத்தை பொறுத்தவரையில் வெளி மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டத்தில் இயக்கக்கூடிய அனைத்து பேருந்துகளும் நாகர்கோவில் வடசேரி பேருந்து நிலையத்தில் இருந்து வருகின்றது . ஆனால் கொரோனா பரவல் அதிகமாக காணப்பட்டபோது காய்கறி சந்தையானது பேருந்து நிலையத்திற்கு மாற்றம் செய்யப்பட்டது. இந்நிலையில் தற்போது மீண்டும் பேருந்து போக்குவரத்து தொடங்கி இருப்பதனால் பேருந்து நிலையத்தில் இயங்கி வந்த காய்கறி சந்தையை மீண்டும் பழைய இடத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அதன்பின் பேருந்து நிலையத்தில் கட்டப்பட்டு இருந்த கம்புகள் அகற்றப்பட்டு அங்கு அமைக்கப்பட்டிருந்த அனைத்து கடைகளும் அப்புறப்படுத்தப்பட்டது. ஆனாலும் கனகமூலம் சந்தையில் கடைகள் அருகருகே நெருக்கமாக இருப்பதனால் மக்கள் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க முடியாத நிலை ஏற்படும் என்று கூறப்படுகிறது. இதனால் சந்தைக்கு முன்பு உள்ள காலியான இடத்தில் கடைகளை அமைப்பதற்கு ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது. இதனைத்தொடர்ந்து ஊரடங்கு தளர்வுகள் காரணமாக கடந்த 2 வாரங்களாக காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டும் செயல்பட்டுவந்த டீக்கடைகள் மாலை 7 மணி வரை செயல்பட அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதேபோன்று பல கடைகளும் கூடுதல் நேரம் செயல்படுவதற்கு அரசு அனுமதி வழங்கி இருக்கின்றது.
மார்த்தாண்டம் பேருந்து நிலையத்தில் ஒரு பகுதியில் சில்லரை காய்கறி விற்பனையும், பழ விற்பனையும் நடைபெற்று வந்தது. இந்நிலையில் பேருந்து போக்குவரத்து நடைபெற இருப்பதனால் வியாபாரம் செய்து வந்த வியாபாரிகள் காய்கறிகளையும், பழங்களையும் மார்த்தாண்டம் காய்கறி சந்தைக்கு இடமாற்றம் செய்ய மூட்டைகளில் கட்டி வாகனத்தில் ஏற்றிக்கொண்டு சென்றனர். இவ்வாறு இன்று முதல் ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்ட நிலையில் சில கடைகள் சமூக இடைவெளியுடன் அரசு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளுடன் கடைகளை திறந்து செயல்பட்டு வருகின்றது.