அடுத்தடுத்து நடந்த கொலையில் பிரபல கஞ்ச வியாபாரியையும் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள சுவாமிநாதபுரம் பகுதியில் ஜேசுதாஸ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவரும் வடக்கு குண்டலை பகுதியை சேர்ந்த செல்வின் என்பவரும் முருகன் குன்றத்தில் கத்தியால் குத்துப்பட்டு படுகொலை செய்யப்பட்டனர். இந்த சம்பவத்தில் சுனாமிகாலனியைச் சேர்ந்த ஜெனிஸ் என்பவர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை பிடிப்பதற்கு 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை மேற்கொண்டு வந்துள்ளனர். இதனையடுத்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த ஜெனிசிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர் அளித்த தகவலின்படி கொலையில் சம்பந்தப்பட்ட அகஸ்தீஸ்வரம் பகுதியில் வசிக்கும் பக்கீஸ்வரன், முத்துக்குமார் ஆகியோரை காவல்துறையினர் கைது செய்தனர்.
அதன் பின் அவர்களிடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் ஜேசுராஜ், செல்வின், ஜெனிஸ் மற்றும் பக்கீஸ் ஸ்வரன் முத்துக்குமார் ஆகியோர் சம்பவ இடத்தில் கூட்டாக சேர்ந்து மது மற்றும் கஞ்சா பிடித்த போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது தெரியவந்தது. அப்போது ஆத்திரமடைந்த பக்கீஸ்வரன் மற்றும் முத்துக்குமார் சேர்ந்து முதலில் ஜெனி சை கத்தியால் குத்தி உள்ளனர். அதன்பின் செல்வினையும், ஜேசுராஜையும் அடுத்தடுத்து கத்தியால் குத்தி கொலை செய்தது காவல்துறையினருக்கு தெரியவந்தது. இதனைதொடர்ந்து கைதான 2 பேரையும் காவல்துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் காவல் துறையினர் நடத்திய தொடர் விசாரணையில் இந்த கொலை சம்பவத்தில் அகஸ்தீஸ்வரம் சேர்ந்த கஞ்சா வியாபாரி ராஜேஷ்க்கும் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. எனவே தலைமறைவாக இருக்கின்ற ராஜேஸை தனிப்படை காவல்துறையினர் வலைவீசி தேடி வந்தனர்.
இந்நிலையில் ராஜேஷ் அகஸ்தீஸ்வரம் பகுதியில் பதுங்கி இருந்தது காவல்துறையினருக்கு தெரியவந்தது. அதன்பின் தனிப்படை காவல்துறையினர் அங்கு விரைந்து சென்று ராஜேஸை மடக்கிப் பிடித்து அவரை கைது செய்தனர். கஞ்சா வியாபாரியான ராஜேஷ் மீது கஞ்சா விற்பனை, திருட்டு உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட வழக்குகள் இருப்பது குறிப்பிடத்தக்கது. இதனைதொடர்ந்து அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் பக்கீஸ்வரன் மற்றும் முத்துக்குமார் மூலமாக கொலை செய்யப்பட்ட 2 பேருக்கும் கஞ்சா சப்ளை செய்தது காவல்துறையினருக்கு தெரியவந்தது. இவ்வாறு சம்பவத்தன்று பணம் கொடுக்கல்-வாங்கலில் மோதல் ஏற்பட்டு கத்திக்குத்து சம்பவம் ஏற்பட்டுள்ளது. எனவே கொலை செய்துவிட்டு தப்பிச் சென்ற 2 பேருக்கும் ராஜேஷ் அடைக்கலம் கொடுத்துள்ள தகவலும் வெளியாகியது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ராஜேஸையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.