குளிக்க சென்ற வாலிபர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அரியலூர் மாவட்டத்தில் உள்ள குலுமூர் பகுதியில் சக்திவேல் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 12ஆம் வகுப்பு முடித்த பிரகாஷ் மற்றும் பிரவீன்குமார் என்ற இரு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் அவர்கள் இருவரும் பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள கவுல்பாலயத்தில் வசிக்கும் அவரது பெரியம்மாள் வள்ளி வீட்டிற்கு வந்து தங்கியிருந்தனர். இதனையடுத்து கள்ளாங்குத்துப் பகுதியில் இருக்கும் கல்குவாரி அமைப்பதற்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் தேங்கிய தண்ணீரில் குளிப்பதற்காக பிரகாஷ் மற்றும் பிரவீன் குமார் உள்பட 2 சிறுவர்கள் சென்றுள்ளனர். அவர்கள் அனைவரும் தண்ணீரில் இறங்கி குளித்துக் கொண்டிருந்தனர். ஆனால் ஆழம் அதிகமாக இருந்ததால் நீச்சல் தெரியாமல் பிரகாஷ் எதிர்பாராதவிதமாக தண்ணீரில் மூழ்கி விட்டார். இதனைப் பார்த்த பிரவீன் குமாரும், இரண்டு சிறுவர்களும் பதற்றத்துடன் விரைந்து சென்று அருகில் இருந்தவர்களிடம் கூறியுள்ளனர்.
மேலும் அங்குள்ளவர்கள் உடனடியாக பெரம்பலூர் தீயணைப்புநிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். இதுகுறித்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த பிரகாஷின் சடலத்தை மீட்டனர். இதனையடுத்து பிரகாஷின் சடலத்தை பார்த்ததும் அவரது குடும்பத்தினர் கதறி அழுதனர். மேலும் இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் பிரகாஷின் உடலை மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.