சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஆறுமுகநேரி பகுதியில் தடையை மீறி, கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்தத் தகவலின் படி காவல்துறையினர் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அப்பகுதியில் வாலிபர் ஒருவர் காவல்துறையினரை பார்த்ததும் அங்கிருந்து தப்பித்துச் செல்ல முயன்றுள்ளார். இதனால் சந்தேகமடைந்த காவல்துறையினர் அந்த வாலிபரை மடக்கி பிடித்து எதற்காக எங்களை பார்த்ததும் ஓட முயற்சி செய்தாய் என்று கேட்டு சோதனை செய்த போது அந்த வாலிபரிடம் கஞ்சா பொட்டலம் இருந்ததை கண்டு பிடித்துள்ளனர்.
இதனையடுத்து காவல்துறையினர் அந்த வாலிபரிடம் நடத்திய விசாரணையில் அவர் சீதக்காதி பகுதியில் வசிக்கும் ஹசன் பண்ணா என்பது தெரியவந்துள்ளது. அதன்பிறகு காவல்துறையினர் அந்த வாலிபர் விற்பனைக்காக வைத்திருந்தத 100 கிராம் கஞ்சா பொட்டலத்தை பறிமுதல் செய்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிந்த காவல்துறையினர் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்த குற்றத்திற்காக ஹசன் பண்ணாவை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.