ஆட்டோ கவிழ்ந்து ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாவட்டத்திலுள்ள கொருக்குப்பேட்டை பகுதியில் ராஜ்குமார் என்பவர் வசித்து வந்தார். இந்நிலையில் ராஜ்குமாரின் பெற்றோரான ராஜேந்திரன் – வீரம்மாள் இருவரும் உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்துள்ளனர். இதனை அடுத்து ராஜ்குமார் தனது பெற்றோரை பலமநேர் பகுதியில் இருக்கும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளார். இதனை அடுத்து சிகிச்சை முடிந்தவுடன் ராஜ்குமார் தனது பெற்றோருடன் ஆட்டோவில் வந்துள்ளார். அதன்பின் ராணிப்பேட்டை – சென்னைக்கு வரும் வழியில் வட்டார போக்குவரத்து அலுவலகம் அருகில் வந்து கொண்டிருக்கும் போது நிலைதடுமாறிய ஆட்டோவானது தலைகுப்புற கவிழ்ந்து விழுந்ததில் ராஜ்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் ராஜ்குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் லேசான காயங்களுடன் உயிர்பிழைத்த கணவன், மனைவி மற்றும் ஆட்டோ டிரைவர் ஆகியோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.