தேனி மாவட்டத்தில் விமான நிலையத்தில் தொழில்நுட்ப பிரிவில் வேலை வாங்கி கொடுப்பதாக கூறி பெண்ணிடம் 15 லட்சம் பணம் பெற்று ஏமாற்றிய 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டியை அடுத்துள்ள ஜம்புலிபுத்தூரில் மலைச்சாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது மனைவி சாரதா(35) b.ed பட்டப்படிப்பு படித்து முடித்துள்ளார். இந்நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் அசோக் என்ற நபர் சாரதாவை தொடர்புகொண்டு விமான நிலையத்தில் தொழில்நுட்ப பிடியில் வேலை இருப்பதாகவும் அதனை உங்களுக்கு வாங்கி தருகிறோம் எனவும் கூறியுள்ளார். இதனை நம்பிய சாரதா ஆன்லைன் மூலம் அந்த வேலைக்கு விண்ணப்பித்துள்ளார். இதனையடுத்து அசோக்கின் கூட்டாளிகளான அக்பர், ராஜாராம், விநாயகமூர்த்தி ஆகியோரும் சாரதாவிடம் செல்போனில் தொடர்புகொண்டு வேலை சம்பந்தமாக பேசியுள்ளனர்.
இதனால் சாரதா வேலை கிடைத்துவிடும் என மிகவும் நம்பிக்கையோடு இருந்துள்ளார். இதனைத்தொடர்ந்து அந்த மர்ம நபர்கள் பயிற்சி கட்டணம், அதிகாரிகளுக்கு கமிஷன், தொழில்நுட்ப உபகரணங்களுக்கான கட்டணம் என பல்வேறு காரணங்களை கூறி சாரதாவிடம் பணம் கேட்டுள்ளனர். இந்நிலையில் சாரதாவும் அவர்களின் பேச்சை நம்பி 15 லட்சத்து 74 ஆயிரம் ரூபாவை பல்வேறு தவணைகளாக அவர்கள் அனுப்பிய வங்கி கணக்கில் செலுத்தியுள்ளார்.
மேலும் பணம் பெற்றுக் கொண்ட நபர்கள் வேலை வாங்கி கொடுக்காமல் ஏமாற்றியுள்ளனர். இதுகுறித்து சாரதா தேனி மாவட்ட சூப்பிரண்டு அதிகாரி அலுவலகத்தில் உள்ள சைபர் கிரைம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார் அந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இதனையடுத்து அந்த மர்ம நபர்களின் விவரங்கள் தெரியாத நிலையில் அவர்கள் கொடுத்த வங்கி கணக்கின் விவரங்கள் அடிப்படையிலும், செல்போன் நம்பரையும் வைத்து சைபர் கிரைம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.