கணவர் என்று கூட பாராமல் மனைவி கல்லால் தாக்கி கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கீழ பூவாணி பகுதியில் மாரியப்பன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள மூலிகைகளை பறித்து அதை வெளியிடங்களுக்கு விற்பனை செய்யும் தொழிலை செய்து வந்துள்ளார். இவருக்கு பேச்சியம்மாள் என்ற மனைவி இருக்கின்றார். இந்த தம்பதிகளுக்கு சரவணன் என்ற மகனும், அமுதசுரபி, என்ற மகளும் இருக்கின்றனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மாரியப்பனுக்கு, பேச்சியம்மாளுக்கும் இடையே குடும்ப பிரச்சனை காரணமாக தகராறு ஏற்பட்டதால் பேச்சியம்மாள், மாரியப்பனை விட்டு பிரிந்து தனது பிள்ளைகளுடன் அதே பகுதியில் வேறு ஒரு வீட்டில் வசித்து வருகின்றார்.
இதனையடுத்து பேச்சியம்மாளும் அவரின் மகனான சரவணனும் இணைந்து அப்பகுதியில் உள்ள மூலிகைகளை பறித்து வெளியிடங்களுக்கு அனுப்பி வந்துள்ளனர். அவ்வாறு பறித்து வைத்திருந்த மூலிகைகளை யாரோ ஒருவர் அடிக்கடி திருடி சென்றுள்ளார். இந்நிலையில் பேச்சியம்மாள் சேகரித்து வைத்திருந்த மூலிகைகளை விற்பனை செய்வதற்காக அதை எடுப்பதற்கு சென்று உள்ளார். அப்போது அங்கு மாரியப்பன் தனது மனைவி விற்பனைக்கு வைத்திருந்த மூலிகைகளை திருடிக் கொண்டிருந்தார். இதனைப் பார்த்த பேச்சியம்மாள் இவ்வாறு தாங்கள் சேகரித்த மூலிகைகளை திருடிச் சென்று விற்பனை செய்கிறீர்களே என்று கேட்டுள்ளார்.
அதற்கு மாரியப்பன் அப்படி தான் எடுத்து செல்வேன் என்று கூறி மீண்டும் மூலிகைகளை எடுத்துக் கொண்டிருந்தார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த தகராறில் கோபமடைந்த பேச்சியம்மாள் அங்கிருந்து கல்லை எடுத்து மாரியப்பனின் தலையின் மீது போட்டு விட்டார். இதனால் மாரியப்பன் தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்து உயிருக்காக போராடிக் கொண்டிருந்தார். இதனையடுத்து சரவணன் அங்கு சென்றபோது தனது தந்தை ரத்த வெள்ளத்தில் துடித்து கொண்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்து அவரை உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளார்.
ஆனால் அங்கு மாரியப்பனுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் மருத்துவமனைக்கு விரைந்து சென்று மாரியப்பனின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தனது கணவர் என்று கூட பாராமல் மனைவியே கணவரின் தலையில் கல்லை தூக்கிப் போட்டு கொலை செய்த குற்றத்திற்காக அவரை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.