ஒரு பெண் வாக்கி டாக்கி கோபுரத்தின் மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாவட்டத்திலுள்ள திருவேற்காடு பகுதியில் ராஜேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராஜூலா என்ற மனைவி உள்ளார். கடந்த சில வருடங்களுக்கு முன்பு தம்பதியினருக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ராஜூலா கணவரை விட்டு தனியாக பிரிந்து தனது சொந்த ஊருக்கு சென்று உள்ளார். இந்நிலையில் மீண்டும் தனது கணவரை பார்க்க சென்ற ராஜூலா தனக்கு சொந்தமான பணம் மற்றும் நகையை திருப்பி தருமாறு கேட்ட போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இது குறித்து புகார் அளிப்பதற்காக ராஜூலா பூந்தமல்லியில் இருக்கும் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு சென்றுள்ளார். ஆனால் அந்த புகாரை ஏற்பதற்கு காவல்துறையினர் தாமதம் செய்ததால் கோபமடைந்த ராஜூலா அங்கிருந்த வாக்கிடாக்கி கோபுரத்தின் மீது ஏறி விட்டார்.
அதன்பின் கோபுரத்தின் 80 அடி உயரத்தில் அமர்ந்து கொண்டு கீழே குதித்து தற்கொலை செய்து கொள்ளப் போவதாக மிரட்டல் விடுத்துள்ளார். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பூந்தமல்லி தீயணைப்பு நிலைய வீரர்கள் அவரை மீட்பதற்கு முயற்சி செய்துள்ளனர். அப்போது காவல்துறையினர் கையெடுத்து கும்பிட்டும், அவரது உறவினர்கள் கதறி அழுதும் அந்த பெண் மேலே இருந்து கீழே இறங்க மறுத்து விட்டார். இதனைத் தொடர்ந்து பூந்தமல்லி நகர தி.மு.க செயலாளர் ரவிக்குமார் என்பவர் அந்தப்பெண்ணின் வேண்டுகோளுக்கு இணங்க எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு வீடியோ கால் செய்வதாக உறுதி அளித்துள்ளார். அதன்பின் அந்தப் பெண் சுமார் 3 மணி நேர போராட்டத்திற்கு பிறகு அங்கிருந்து கீழே இறங்கி வந்துள்ளார். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.