தமிழகத்தில் மருத்துவ நுழைவு தேர்வுக்கான நீட் தேர்வை ரத்து செய்யும்படி பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். நீட் தேர்வின் தாக்கம் என்ன என்பது குறித்து ஏ.கே ராஜன் தலைமையிலான குழு ஆய்வு செய்து வருகிறது. மேலும் தமிழ்நாட்டின் நீட் தேர்வு 100% ரத்து செய்யப்படும் என்று அமைச்சர் சுப்பிரமணியன் உறுதியளித்துள்ளார். திமுகவை பொறுத்தவரை நீட் தேர்வு என்பது கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறோம் என்றும், நீட் தேர்வுக்கு எதிராக தமிழக அரசு கொண்டு வர உள்ள தீர்மானம் உச்சநீதிமன்றம் மற்றும் குடியரசுத்தலைவரால் நிராகரிக்க முடியாத அளவிற்கு இருக்கும் என்று அவர் தெரிவித்தார்.
இந்நிலையில் நீட் தேர்வு விவகாரத்தில் பாஜக இரட்டை வேடம் போடுகிறது என்றும், பாஜக மாநில பொதுச் செயலாளர் கரு.நாகராஜன் அரசியல் உள்நோக்கத்தோடு வழக்கு தொடர்ந்துள்ளார். அரசுக்கு உறுதுணையாக இருப்போம் என்பது போன்று சட்டமன்றத்தில் நயினார் நாகேந்திரன் பேசினார் என்று கடுமையாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் விமர்சித்துள்ளார்.