மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் தீக்குளிக்க முயன்ற திருமண ஜோடிகளால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மனு கொடுப்பதற்காக வந்த திருமண ஜோடிகள் இருவரும் திடீரென அவர்கள் வைத்திருந்த மண்ணெண்ணையை எடுத்து உடல் முழுவதும் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். இதனைப் பார்த்த அருகிலிருந்த காவல்துறையினர் இருவரையும் தடுத்து அவர்கள் மீது தண்ணீரை ஊற்றினர். அதன்பின் அவர்களிடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அவர்கள் திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள வி.கூத்தம்பட்டி பகுதியில் வசிக்கும் ஐ.டி.ஐ. படித்து முடித்த புவனேஸ்வர் மற்றும் பி.ஏ. முதலாமாண்டு படித்துக் கொண்டிருக்கும் கஜோனியா என்பது தெரியவந்துள்ளது.
மேலும் இவர்கள் ஒருவருக்கொருவர் காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் புவனேஷ்வரும் கஜோனியாவும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெற்றோரின் சம்மதம் இல்லாமல் திருமணம் செய்துள்ளனர். இதற்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் பாதுகாப்பு தருமாறு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு கோரிக்கை மனு கொடுக்க வந்துள்ளனர். இந்நிலையில் விரக்தியின் காரணமாக இருவரும் திடீரென தீக்குளிக்க முயன்றதாக காவல்துறையினர் நடத்திய விசாரணையில் தெரிய வந்துள்ளது.