உழவர் சந்தையை திறக்கக்கோரி ஆட்சியர் அலுவலகத்திற்கு விவசாயிகள் காய்கறிகளுடன் மனு கொடுக்க சென்றுள்ளனர்.
தமிழகத்தில் கொரோனா தொற்றின் 2 – வது அலை பரவல் குறைந்து வருவதினால் அரசு தளர்வுகளுடன் கூடிய முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. தற்போது காய்கறி, மல்லிகை, இறைச்சி, தேனீர், சலூன் கடைகள் போன்றவற்றை திறக்க அரசு அனுமதி அளித்துள்ளது. இதனால் உழவர் சந்தையின் முன்பு வியாபாரிகள் காய்கறிகளை வைத்து விற்பனை செய்து வருகின்றனர். இதனை அடுத்து சேலம் மாவட்டத்தில் இருக்கும் 11 உழவர் சந்தைகளை திறந்து வியாபாரிகள் காய்கறிகளை விற்பனை செய்ய வேண்டும் என விவசாயிகள் காய்கறிகளுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று மனு அளித்துள்ளனர்.
இதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன்பு காய்கறிகளை 2 – ரூபாய்க்கு விற்பனை செய்து நூதன முறையில் போராடிய விவசாயிகள் தங்களின் கோரிக்கைகளை அரசிடம் முன்வைத்துள்ளனர். இதுகுறித்து விவசாயிகள் கூறும்போது உழவர் சந்தையை திறக்காததால் 60 சதவீதம் காய்கறிகள் தினமும் சேதமாடைகிறது என தெரிவிக்கின்றனர். மேலும் உழவர் சந்தையில் விற்பனை செய்யும் விவசாயிகளுக்கு என மாற்று இடம் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் எனவும் அரசின் விதிமுறைகளை பின்பற்றுவோம் எனவும் உறுதி அளிப்பதாக மனுவில் சுட்டிக்காட்டியுள்ளனர்.